குழந்தைகளின் தண்ணீர் பாட்டிலில் ரூ5.8 கோடி ஹெராயின் கடத்தல்: பெண் உட்பட இருவர் கைது

மும்பை: மும்பையில் குழந்தைகளின் தண்ணீர் பாட்டில் மூலம் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்திய பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த மன்குர்ட் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போதைப் பொருட்களை வைத்திருந்த பெண் உட்பட இருவரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 935 கிராம் ஹெராயினை மீட்டனர். இதன் சர்வதேச மதிப்பு 5 கோடியே 80 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இவர்கள் குழந்தைகளுக்கான தண்ணீர் பாட்டில்களில் ஹெராயின் போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்த முயன்றனர். கைது செய்யப்பட்ட பெண், நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர். கடந்த ஆறு மாதங்களாக அவரை தேடிவந்தோம். தற்போது சிக்கியுள்ளார். அவரிடம் தண்ணீர் பாட்டில் தவிர மாணவர்களின் பள்ளிப் பையும் இருந்தது’ என்றனர்.

Related Stories: