நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காலை 10.30க்கு வாக்கெடுப்பு இம்ரான் ஆட்டம் இன்றோடு அவுட்: புதிய ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் ஆலோசனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று காலை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில், அவர் தோல்வி அடைவது ஏற்கனவே உறுதியாகி விட்ட நிலையில், புதிய ஆட்சி அமைப்பதற்கான முதல் கட்ட ஆலோசனையை எதிர்க்கட்சிகள் நடத்தி முடித்துள்ளன. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு, விலைவாசி உயர்வுக்கு பிரதமர் இம்ரான் கானின் தவறான கொள்கைகளை காரணம் என குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இதன் மீது கடந்த 3ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. அப்போது, தனது அரசை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்திருப்பதாக இம்ரான் கான் திடீரென குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, ‘அரசை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது,’ என்று கூறிய துணை சபாநாயகர் காசிம் சுரி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில் அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. அதே நேரம், ஆட்சிக்கு எதிரான வெளிநாட்டு சதி நடப்பதாக இம்ரான் கூறிய குற்றச்சாட்டு குறித்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியால் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரித்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அதிரடியாக ரத்து செய்தது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் சுரி நிராகரித்தது அரசியலமைப்பு சட்டம் 95க்கு எதிரான செயல் என கூறி, அவருடைய உத்தரவையும் ரத்து செய்தது. அதோடு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஏப்ரல் 9ம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தும்படியும் உத்தரவிட்டது.

அதன்படி, இன்று காலை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.  இம்ரானுக்கு அளித்து வந்த ஆதரவை ஏற்கனவே கூட்டணி கட்சிகள் விலக்கி கொண்டு விட்டதால், அவர் ஏற்கனவே பெரும்பான்மை இழந்துள்ளார். இதனால், இன்றைய வாக்கெடுப்பில் அவருடைய அரசு தோற்பது உறுதியாகி விட்டது. இதனால், புதிய ஆட்சியை அமைப்பதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சிகள் நடத்தி முடித்துள்ளன. இம்ரான் கானை மட்டுமின்றி, அவருக்கு ஆதரவாக உள்ள அதிபர் ஆல்வியையும் பதவியில் இருந்து நீக்க, எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக, பாகிஸ்தானில் பரபரப்பு நிலவுகிறது.

புதிய பிரதமர் ஷெபாஸ்

* பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப்பை புதிய பிரதமராக எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுக்க உள்ளன. அவர் பதவியேற்ற பிறகு, அதிபர் ஆல்வியை நீக்கும் நடவடிக்கை தொடங்கப்பட இருக்கிறது.

* இங்கிலாந்தில் தற்போது தங்கியுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானுக்கு திரும்ப அழைத்து வரப்பட உள்ளார்.

வெளிநாட்டு சதி; விசாரணை குழு

பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பவாத் சவுத்ரி கூறுகையில், `பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், வெளிநாட்டின் ஆட்சி கவிழ்ப்பு சதி குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் தாரிக் கான் தலைமையில்  குழு அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 8 அதிருப்தி எம்பி.க்களை வெளிநாட்டு குழு தொடர்பு கொண்டு பேசியதற்கான ஆதாரம் உள்ளது,’ என்று தெரிவித்தார்.

Related Stories: