திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் முடக்கியது அதிமுக அரசு தான்: வேலுமணி பேச்சுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பதில்

சென்னை: ‘திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் முடக்கியது அதிமுக ஆட்சியாளர்கள் தான்’ என்று பேரவையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார். தமிழக சட்டசபையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பதிலளித்து பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் 30 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே உள்ளாட்சி தேர்தல்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகத்தை பாதுகாக்கும் அரசாக கலைஞர் அரசு எப்போதும் இருந்திருக்கிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பல திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக அதிமுக ஆட்சியாளர்கள் முடக்கிவிட்டனர்.   

ஆனால் இங்கு பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.பி வேலுமணி, அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளதாக சொல்கிறார். திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை அதிமுக அரசு முடக்கியதை பட்டியலிட்டு சொல்லலாம். சமத்துவபுரங்களை கூட அதிமுக அரசு முடக்கியது. அவற்றை எல்லாம் சீர் செய்து திறக்க ரூ.190 கோடியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, அம்மா இருசக்கர வாகன திட்டத்தை செயல்படுத்தவில்லை என்று கூறினார். பெண்களுக்கு இருசக்கர வாகன தேவை தற்போது குறைந்து வருகிறது.

நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார். 1997ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த நமக்கு நாமே திட்டத்தை தன்னிறைவுத் திட்டம் என்று மாற்றினீர்கள். அவர் கொண்டு வந்த அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை தாய்த் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்தீர்கள். பெயர் மாற்றுவதில் வல்லவர்கள் நீங்கள் தான். சாதி, மதக் கலவரங்கள் கூடாது என்ற நோக்கத்தில் சமத்துவபுரம் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். தமிழகத்தில் 238 சமத்துவபுரங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் அதை செயல்படுத்தி இருந்தால் இன்று 500 முதல் ஆயிரம் சமத்துவபுரங்கள் தமிழகத்தில் இருந்திருக்கும். குடிசை மாற்று வாரியம், இந்தியா முழுவதும் பரவியதைப் போல இந்தத் திட்டமும் பரவியிருக்கும்.

நிதி ஒதுக்கீடு: இந்த துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேலுமணி கூறினார். கடந்த 10 ஆண்டுகளாக ஒரே துறையில் அமைச்சராக இருந்தவர் அவர். கடந்த 2011-16ம் ஆண்டில் இந்தத் துறைக்கு ரூ.13 ஆயிரத்து 463 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2016-21ம் ஆண்டில் ரூ.19 ஆயிரத்து 116 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆட்சியின் முதல் நிலை அறிக்கையில் இந்தத் துறைக்கு ரூ.22 ஆயிரத்து 237 கோடியும், இந்த நிதி நிலை அறிக்கையில் ரூ.26 ஆயிரத்து 647 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எது குறைவு என்பது இந்த பேரவைக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: