கொடுங்கையூர் பகுதியில் மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை: 2 பேர் பிடிபட்டனர்

பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியில் கறவை மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்த இரண்டுபேரை கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்தவர் கவுசல்யா (48). இவர் பால் மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த மாதம் 29ம்தேதி, கொடுங்கையூர் தென்றல் நகர் பகுதியில் 3 கறவை மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டுவிட்டு சென்றார். அவர் மாலையில் மாடுகளை பிடிக்கவந்தபோது மாடுகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதி மக்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அதே பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் இரண்டு மாடுகளையும் காணவில்லை என்று புகார் கொடுக்கப்பட்டது. இதன்படி, கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில், மணலி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சூர்யா (24), கொடுங்கையூர் சின்னாடிமடம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (19) ஆகியோரை பிடித்து விசாரித்தபோது இவர்கள்தான் மாடுகளை  திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் திருடிய மாடுகள் அனைத்தையும் வியாசர்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரிடம் விற்பனை  செய்துள்ளனர். பின்னர் அந்த மாடுகளை புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாடு தொட்டியில் இறைச்சிக்காக பயன்படுத்தி உள்ளனர் என்று தெரியவந்தது. இவர்களுடன் மாடு திருட்டில் ஈடுபட்டு மதுரையில் தலைமறைவாக உள்ள நாகேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.  மேலும் அவர்களிடம் இருந்து மாடுகளை விற்பனை செய்து வாங்கி ஒரு லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தோஷ், சூர்யா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: