நாகர்கோவிலில் காலியாக கிடந்த வீட்டுக்குள் நுழைந்து ஏமாந்த கொள்ளையர்கள்-கேமராக்கள் பதிவு உபகரணங்களை தூக்கி சென்றனர்

நாகர்கோவில் :  நாகர்கோவிலில் காலியாக கிடக்கும்  தொழிலதிபர் வீட்டுக்குள் ஜன்னல் கம்பியை வளைத்து நுழைந்து கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

நாகர்கோவில் சீயோன் தெருவை சேர்ந்தவர் ஜோ நாதன் டேனியல். இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் அருகில் உள்ள லுத்ரன் தெருவில் இவரது பெற்றோர் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு அவர்கள் இறந்ததை தொடர்ந்து வீடு பூட்டியே கிடக்கிறது.

அந்த வீட்டில் வேறு எந்த பொருட்களும் இல்லை. அருகில் உள்ள ஒரு வேலைக்காரப் பெண் வாரந்தோறும் வந்து இந்த வீட்டில் உள்ள பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி செல்வது வழக்கம். இதேபோல் நேற்று காலை 11 மணியளவில் அந்தப் பெண் தண்ணீர் ஊற்ற வந்தபோது வீட்டின் மேல் மாடியில் ஜன்னல் கம்பி பெயர்த்து எடுக்கப்பட்ட நிலையில் இருந்தது. உடனடியாக இது குறித்து ஜோ நாதன் டேனியலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சென்னை சென்றுள்ளதால் உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர். நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

டி.எஸ்.பி. நவீன்குமார், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டில் மாடியில் ஜன்னல் கம்பியை அறுத்தெடுத்து ெகாள்ளை கும்பல் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்து கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் உள்ள எல்லா அறை கதவுகளையும் உடைத்துள்ளனர். ஆனால் வீட்டில் நகையோ, பணமோ மற்றும் வேறு எந்த பொருட்களும் இல்லை. வீடு காலியாக கிடந்ததால் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

இந்த வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. வீட்டுக்குள் நுழைந்ததும் கேமராக்கள் இருப்பதை பார்த்த கொள்ளையர்கள் வெளியே செல்லும் போது கேமராக்களின் காட்சிகள் பதிவாகி இருக்கும் ஹார்டு டிஸ்க் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை எடுத்து சென்று விட்டனர். எனவே கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீட்டில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலமும் சோதனை நடந்தது. இதில் 2 கைரேகைகள் சிக்கி உள்ளன.

இந்த வீட்டில் இருந்து 5 வீடுகள் தள்ளி டாக்டர் ஜலஜா குமாரி (60) என்பவரின் வீடு உள்ளது. இவர் பிரபல தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2ம் தேதி இரவு பணிக்கு சென்றிருந்த போது தங்க நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தனர். இந்த இரு வீடுகளிலும் ஒரே கும்பல் தான் கைவரிசை காட்டி இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இரு சம்பவங்களும் ஒரே நாளில் நடந்து இருக்குமா? அல்லது அடுத்தடுத்த நாட்களில் வந்து கைவரிசை காட்டி இருப்பார்களா? என்பது பற்றி தெரிய வில்லை. இரு இடங்களில் பதிவான கைரேகைகளை ஆய்வு ெசய்து வருகிறார்கள்.

வட மாநில கொள்ளை கும்பல் மீது சந்தேகம்

மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் ேஜா நாதன் வீட்டில் ஜன்னல் கம்பியை வளைத்து உடைத்து இருந்தனர். அதன் துவாரம் வழியாக சிறிய உடலமைப்பு ெகாண்டவர்கள் தான் நுழைய முடியும். இதற்கு முன் இதே பாணியில் வட மாநில கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளது. எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் வட மாநில கும்பல் ஈடுபட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கேரளாவில் ஒரு சில இடங்களில் ஜோக்கர் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவங்கள் நடந்தன. ஜலஜாகுமாரி வீட்டை நோட்டமிடும் வாலிபர் ஒருவரின் உருவம் அந்த பகுதியில் உள்ள ஒரு கேமராவில் சிக்கி உள்ளது. அதில் அந்த வாலிபர் ஜோக்கர் முகமூடி அணிந்துள்ளார். எனவே கேரள கும்பலை சேர்ந்தவர்களின் கைவரிசையாக இருக்குமா? என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories: