நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பது விதிமுறை மீறல்: நியாயமான தீர்ப்பு அளிப்பதாக பாக். உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ‘சட்டப்படி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிரகாரிக்க முடியாது. இந்த வழக்கில் நியாயமான உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. கடந்த 4ம் தேதி நாடாளுமன்றம் கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. ஆனால், திடீர் திருப்பமாக இந்த தீர்மானம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி துணை சபாநாயகர் அதை நிராகரித்தார். அதே சமயம், நாடாளுமன்றத்தை கலைக்கும்படி பிரதமர் இம்ரான் அளித்த பரிந்துரையை ஏற்று, அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்தார்.

90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும்  உத்தரவிட்டார். இதற்கிடையே, இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவரை நியமனம் செய்யப்படும் வரை, காபந்து பிரதமராக இம்ரான் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், 3 மாதத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால் சிறிது நேரத்திலேயே இத்தகவலை பாகிஸ்தான்  தேர்தல் ஆணையம் மறுத்தது. அதன் அறிக்கையில், ‘பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்தலை நியாயமான நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யத் தயார்’ என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராகவும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘சபாநாயகர் அரசியலமைப்பின் 5வது பிரிவை மேற்கோள் காட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்க முடியாது. இதில், விதிமுறை மீறல்கள் உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாக கண்டிப்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது நடைபெறவில்லை. சபாநாயகர் மட்டுமே உத்தரவை பிறப்பிக்க உரிமை உண்டு. சபாநாயகர் இல்லாததால், துணை சபாநாயகர் அமர்வுக்கு தலைமை தாங்குகிறார். நியாயமான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும்’ என்று கூறி வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், எதிர்க்கட்சிகள், முழு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற கோரி கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

Related Stories: