ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் எய்ம்ஸ் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்-கட்டுமான பணி முடிந்ததும் மதுரைக்கு மாற்றம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் எய்ம்ஸ் முதலாமாண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. கட்டுமான பணி முடிந்ததும் மதுரை தோப்பூருக்கு வகுப்புகள் மாற்றம் செய்யப்படுமென எய்ம்ஸ் இயக்குநர் ஹனுமந்த ராவ் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் புதியதாக துவங்கிய அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. இங்கு ஐந்தாவது தளம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின.

இத்தளத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஆய்வகம், ஆண், பெண் விடுதி கட்டிடங்கள், நிர்வாக அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் நூலகம், விடுதியில் இன்டர்நெட் வைபை உள்ளிட்ட வசதிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இங்கு 50 மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதல் நாள் வகுப்பிற்கு 35 பேர் வந்தனர். உடற்கூறு இயல், உடலியங்கியல், உயிர்வேதியியல் மற்றும் சமூகம் சார்ந்த மருத்துவத்துறைக்கு பேராசிரியர் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம், மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் இருந்து 6 பேராசிரியர்கள் இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை எய்ம்ஸ் இயக்குனர் ஹனுமந்த ராவ் கூறுகையில், ‘‘மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு 200 ஏக்கரில் சுற்றுச்சுவர் கட்டும் பணி முதற்கட்டமாக நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது. முதற்கட்டமாக மருத்துவக்கல்லூரி, மாணவர் விடுதிகள் கட்டப்படும். எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 170 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் தொற்று நோய், புற்று நோய்க்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படும்.

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடங்கள் கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆகும். இதனால், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியின் ஐந்தாவது தளத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி வகுப்புகள் துவங்கியுள்ளன. தோப்பூரில் எய்ம்ஸ் கல்லூரி கட்டுமான பணிகள் முடிவடைந்ததும் வகுப்புகள் அங்கு மாற்றப்படும்’’ என்றார்.

Related Stories: