ஆந்திராவில் இருந்து விழுப்புரத்துக்கு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரின் பையை கவ்வி பிடித்த மோப்பநாய்-காட்பாடி அருகே அதிகாலை பரபரப்பு

வேலூர் : வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை செக்போஸ்டில் மோப்பநாய் சிம்பா உதவியோடு போலீசார் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. அதன்படி நேற்று அதிகாலை போலீசார் திருப்பதியில் இருந்து விழுப்புரத்திற்கு சென்ற அரசு பஸ்சில் சோதனை நடத்தினர்.

   அப்போது பஸ்சில் ஒரு வாலிபர் வைத்திருந்த பையை மோப்பநாய் சிம்பா கவ்வி பிடித்து இழுத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் உடனடியாக பையை விட்டுவிட்டார்.

போலீசாரிடம் மோப்பநாய் வழங்கிய, அந்த பையை பிரித்து பார்த்தபோது, 3 பொட்டலங்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் விழுப்புரம் மாவட்டம் மட்டப்பாறை பகுதியை சேர்ந்த யுவராஜ்(21) என்பதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜை கைது செய்தனர்.அதிகாலையில் பஸ்சில் போலீசார் நடத்திய சோதனையில் வாலிபர் ஒருவரின் பையை மோப்பநாய் கவ்வி பிடித்து இழுத்த சம்பவத்தால் பயணிகள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

150 கிலோ குட்கா பறிமுதல்

வேலூர் வடக்கு போலீசார் நேற்று காலை பழைய பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 150 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காருடன் குட்காவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த தீபாராம்(35) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் குட்கா பொருட்களை வேலூரில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த குடோன் யாருக்கு சொந்தமானது, அங்கிருந்து குட்காவை விற்பனைக்கு வாங்கி செல்லும் கடைக்காரர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: