சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வை குறைக்காவிட்டால் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட 7 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக்; ஒன்றிய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் 21 நாள் கெடு

சேலம்: சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு 21 நாளில் குறைக்காவிட்டால்  தமிழகம், கேரளா உள்பட 7 மாநிலங்களில் ஸ்டிரைக்கில் ஈடுபட   தென் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த 14 நாளில்  பெட்ரோல் ₹7.94, டீசல் ₹7.99 என்று விலை  அதிகரித்துள்ளது.

மேலும் சுங்ககட்டணம், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த விலை உயர்வை மத்திய அரசு குறைக்க வேண்டும் என தென் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

]இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறுகையில், ‘‘உக்ரைன்-ரஷ்யா போரை காரணம் காட்டி, தற்போது பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால் கடந்த 14 நாளில் டீசல் விலை ₹8 அதிகரித்துள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும், சுங்க கட்டணத்தையும் ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இந்த உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலாவதியான சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தும், ஒன்றிய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி சென்னையில் நடந்த தென்மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். 21 நாட்களில் இந்த விலை உயர்வை குறைக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசித்து தமிழகம், கேரளா உள்பட 7 மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்வோம். எனவே விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’’ என்றார்.

Related Stories: