நடுரோட்டில் விரட்டி சரமாரி வெட்டு கொலை செய்யப்பட இருந்த வாலிபரை காப்பாற்றிய போக்குவரத்து போலீசார்

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி குமரன் நகரை சேர்ந்த பாட்ஷா (25), நேற்று முன்தினம் இரவு அங்குள்ள நடைமேம்பாலத்தில் நடந்து சென்றார். அப்போது, கத்தியுடன் வந்த 2 பேர், பாட்ஷாவை வெட்ட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட அவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ரோந்து பணியில் இருந்த   போக்குவரத்து ஆய்வாளர் சுகுமாரன், ஏட்டு பிரகாஷ் ஆகியோர் இதை பார்த்து, அங்கு ஓடி வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த 2 பேரும், பாட்ஷாவின் காலில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். அவர்களை போலீசார் விரட்டி பிடிக்க  முயன்றனர். அப்போது எதிரே வந்த செம்மஞ்சேரி போலீசார், அவர்களில் ஒருவரை சுற்றிவளைத்து பிடித்தனர். மற்றொருவர் தப்பினார்.

பின்னர், படுகாயமடைந்த பாட்ஷாவை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பிடிப்பட்டவர் செம்மஞ்சேரியை சேர்ந்த அருண்குமார் (20) என்பதும், தப்பிச்சென்றவர் அதே பகுதியை சேர்ந்த கோழி கார்த்திக் (25) என்பதும், முன்விரோத தகராறில் பாட்ஷாவை கொலை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர். வாலிபர் உயிரை காப்பாற்றிய போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories: