கீவ்வின் புறநகரில் 410 அப்பாவிகளின் சடலங்கள் மீட்பு; புச்சா நகரில் கொலை, கொள்ளை, சித்திரவதை, பலாத்காரம்: ரஷ்யப் படைகள் மீது உக்ரைன் அதிபர் சரமாரி குற்றச்சாட்டு

கீவ்: கீவ் புறநகரில் 410 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் புச்சா நகரில் கொலை, சித்திரவதை, பலாத்காரம், கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக உக்ரைன் அதிபர் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள நகரங்களின் தெருக்களில் 410க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், ரஷ்யப் படைகளை கொலைகாரர்கள், சித்திரவதையாளர்கள், பலாத்காரக்காரர்கள் என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது வீடியோ பதிவில், ‘உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய அனைத்து குற்றங்களையும் விசாரிப்போம். சிறப்பு விசாரணை குழுவை அமைப்போம். நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். அவர்களுக்கு மரணம் மட்டுமே சரியான தீர்ப்பாக இருக்கும். ஒவ்வொரு ரஷ்ய வீரரின் தாயும் புச்சா, இர்பின், ஹோஸ்டோமலில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களைப் பார்க்க வேண்டும்.

அவர்கள் உங்களை என்ன செய்தார்கள்? ஏன் அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்? தெருவில் சைக்கிளில் சென்றவர் உங்களுக்கு என்ன செய்தார்? அமைதியான நகரத்தில் வசித்த மக்கள் ஏன் சித்திரவதை செய்யப்பட்டனர்? பெண்களின் காதுகளில் இருந்து காதணிகள் பிடுங்கி கழுத்தை நெரித்து கொன்றது ஏன்? குழந்தைகள் முன்னிலையில் பெண்களை எப்படி உங்களால் பலாத்காரம் செய்து கொல்ல முடியும்? இறந்த பிறகும் அவர்களின் சடலங்களை ஏன் அவமதித்தீர்கள்? டாங்கிகளை கொண்டு அவர்களின் உடல்களை ஏன் நசுக்கினார்கள்? புச்சா நகரம் ரஷ்யாவிற்கு என்ன பாவம் செய்தது?

இதெல்லாம் எப்படி சாத்தியமானது? ரஷ்ய தாய்மார்களே! நீங்கள் கொள்ளையர்களை வளர்த்தாலும் கூட, அவர்களும் எப்படி கசாப்புக் கடைக்காரர்கள் ஆனார்கள்? வேண்டுமென்றே மக்களை கொன்றுள்ளனர்’ என்று ஆவேசமாக பேசினார். உக்ரைன் அதிபர் ேபச்சுக்கு மத்தியில், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா அளித்த பேட்டியில், ‘புச்சா நகரில் நடந்துள்ள சம்பவங்கள், உக்ரைன் ராணுவத்தாலும், தீவிர தேசியவாதிகளாலும் நடத்தப்பட்டவை. புச்சா விவகாரம் இருநாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுக்களை சீர்குலைக்கும்.

மேலும்  வன்முறையை அதிகரிக்கும். கடந்த மார்ச் 30ம் தேதி புச்சா பகுதியில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேறிவிட்டது. அதற்கு பின்னர் நான்கு நாட்களுக்குப் பிறகுதான் கொலைக் குற்றங்கள் பற்றிய சான்றுகள் வெளிவந்தன. புச்சா நகரத்தின் மேயர் அனடோலி ஃபெடோருக் வெளியிட்ட வீடியோவில், ‘புச்சாவில் ரஷ்ய துருப்புக்கள் இல்லை’ என்பதை உறுதிப்படுத்தினார். எனினும் அவர் பொதுமக்கள் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட விபரங்கள் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை’ என்று கூறினார்.

ஐ.நா பொது செயலர் அதிர்ச்சி

உக்ரைனின் புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சர்வதேச அளவில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், புச்சா படுகொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘புச்சாவில் கொல்லப்பட்ட மக்களின் படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதற்கு காரணமானவர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும். சுயாதீன விசாரணை நடத்தப்பட்ட வேண்டும்’ என்று கூறினார்.

ஆயுதங்களை அனுப்புங்க!

போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா வெளியிட்ட அறிவிப்பில், ‘மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுதங்களை அனுப்ப வேண்டும். அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையை புச்சாவில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் பொய்யாக்குகின்றன. எனவே, உக்ரைன் படைகளுக்கு இப்போதைக்கு மூன்று விஷயங்கள் மட்டுமே தேவை. அதாவது ஆயுதங்கள், ஆயுதங்கள், நிறைய ஆயுதங்கள்...’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: