குளத்தில் ஆக்கிரமிப்பு செய்த 125 வீடுகள் இடித்து அகற்றம்: சாமளாபுரத்தில் அதிகாரிகள் அதிரடி

சோமனூர்: சாமளாபுரம் நொய்யல் ஆற்று குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 125 வீடுகள் இன்று இடித்து அகற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் நொய்யல் ஆற்று பெரியகுளம் பகுதியில் பட்டத்தரசி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வசித்து வருகிறார்கள். நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டனர்.

ஆனால் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்பவர்கள், தங்களுக்கு உள்ளூர் பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும். அதுவரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 125 வீடுகளில் தகுதியான 88 குடும்பங்களுக்கு நேற்று பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் திருப்பூர் கோட்டாட்சியர் முருகதேவி தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்து 5 ஜேசிபி இயந்திரம் உதவியுடன் வீடுகளை இடித்து அகற்றினர்.

திருப்பூர் ஏடிஎஸ்பி ஜான்சன், பல்லடம் டிஎஸ்பி வெற்றிச்செல்வன், மங்கலம் காவல்துறை ஆய்வாளர் ராஜவேல், 20 இன்ஸ்பெக்டர்கள், 225 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டா கிடைக்காதவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் வீடுகள் இடித்து அகற்றப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: