14 ஆண்டுக்கு பின் சென்னையில் நடக்கிறது தீவுத்திடலில் வரும் 16ம் தேதி சீனிவாச திருகல்யாணம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

சென்னை: சென்னை தீவுத்திடலில் வரும் 16ம் தேதி சீனிவாச பெருமாள் திருகல்யாணம் நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சென்னை தீவுத்திடலில் திருமலை - திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் வரும் 16ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்கள் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி, தமிழக சுற்றுலா துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக  பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.  இதனால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படனர். இந்நிலையில், திருமலை - திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏப்ரல் 16ம் தேதி சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருகல்யாணம் நடக்கிறது.

இதுகுறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியதாவது: திருமலை -திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரும் 16ம் தேதி, சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பக்தர்கள் அதிகளவில் வர வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். திருப்பதி தேவஸ்தானம் சார்பில்  அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், அன்னமாச்சார்யா கலை குழுவினர் மற்றும் இதரத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பில் இந்த திருக்கல்யாணம் நடத்தப்படும். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. மேலும், இந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: