‘தேர்தலில் கேவலமான தோல்வி’ கட்சி பிரிந்திருக்கும் வரை வெற்றி பெற முடியாது: ஓபிஎஸ் முன்னிலையில் மாவட்ட செயலாளர் ஆவேசம்

தேனி: அதிமுக கட்சி பிரிந்து இருக்கும் வரை வெற்றி பெறவே முடியாது என ஓபிஎஸ் முன்னிலையிலேயே மாவட்டச் செயலாளர்  பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை தேனி பழனிசெட்டிபட்டியில் நடந்தது.  கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் சையதுகான் பேசுகையில், ‘‘ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு தொடர்ந்து மூன்று தேர்தல்களில் கேவலமான தோல்வி அடைந்திருக்கிறோம். ஆண்டிபட்டி தொகுதி நம் சொந்த தொகுதி. அந்த தொகுதியில் இரண்டு முறை தோல்வி அடைந்திருக்கிறோம்.  இதற்கு கட்சி பிரிந்து இருப்பது தான் நமது தோல்விக்குக் காரணம். கட்சி பிரிந்து இருக்கும் வரை அதிமுக வெற்றி பெறவே முடியாது. நமக்குள் இருக்கும் பிரிவினை தீர்ந்து கட்சிகள் இணைந்து விட்டால், அதிமுகவை வீழ்த்த முடியாது. தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்’’ எனப் பேசினார். இறுதியில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘அதிமுக தோல்விக்கு நமக்குள் இருக்கக்கூடிய சோர்வு ஒரு காரணம். சையதுகான் கூறியது போல சில, பல பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். நான் அதற்குள் செல்லவில்லை. நாம் ஒற்றுமையாக இருந்தால் நாம் தான் வெற்றி பெறுவோம். நம்மை யாராலும் அசைக்க முடியாது’’

என்றார்.

* நீக்கப்பட்டவர்களும் ஆஜர்

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓபிஎஸ்சின் பண்ணை வீட்டில் கடந்த மாதம் சசிகலாவுக்கு ஆதரவாக தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் வைகை கருப்பு உள்ளிட்டோர் திருச்செந்தூரில் சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி இவர்கள் மூவரையும் கட்சியிலிருந்து நீக்கினர். இந்நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மீனவர் அணி செயலாளர் வைகை கருப்பு ஆகியோர் கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

* ஓபிஎஸ்க்கு தனியாக செய்தி சேனல்

கூட்டத்தில் சேட் அருணாசலம் என்பவர் பேசுகையில், நமக்கான செய்திகளை ஒளிபரப்புவதற்கு எந்த டிவியும் இல்லை. நம்முடைய செய்தியை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு ஒரு டிவியை நாம் தொடங்க வேண்டும், என்றார். மேடையில் இருந்து கீழே இறங்கிய அவரிடம் கட்சியினர் கேட்டபோது, ‘‘நம்ம கட்சி டிவி வேலுமணி, எடப்பாடி பழனிசாமி செய்திகளை மட்டுமே ஒளிபரப்புகிறது. ஓபிஎஸ் குறித்த செய்திகளை ஔிபரப்புவது கிடையாது. எனவே,  ஓபிஎஸ்க்கு ஆதரவாக தனியாக ஒரு செய்தி சேனல் இருக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: