காவலன் செயலி மூலம் போலீசாருக்கு தகவல் ரயிலில் மாணவிக்கு தொல்லை பயிற்சி டிஎஸ்பி அதிரடி கைது

சென்னை:  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த மாணவி ஷாலினி. இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறையையொட்டி,  எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊரான சங்கரன்கோயிலுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார். ஏ.சி. பெட்டியில் பயணித்த அந்த மாணவி அமர்ந்திருந்த இருக்கைக்கு நேர் எதிரே வாலிபர் ஒருவரும் அமர்ந்துள்ளார். ரயில் எழும்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்த வாலிபர், கல்லூரி மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் மாணவி எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்துள்ளார்.சிறிது நேரத்தில் அந்த பெட்டியில் பயணித்த அனைவரும் விளக்கை அனைத்து விட்டு தூங்க ஆரம்பித்தனர். இரவு 12.30 மணிக்கு ரயில் விருதாச்சலம் அருகே சென்றுகொண்டு இருந்தபோது, மாணவியின் இருக்கைக்கு எதிரே படுத்திருந்த அந்த வாலிபர், மாணவியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, உடனடியாக தனது செல்போனில் உள்ள காவலன் செயலி மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் அண்ணாதுரை மற்றும் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகரும், அந்த மாணவி பயணித்த பெட்டிக்கு விரைந்தனர்.இதையடுத்து, அவர்களிடம் கல்லூரி மாணவி நடந்ததை கூறினார்.  பின்னர்,  அந்த மாணவிக்கு  மற்றொரு பெட்டியில் ஒரு இருக்கையை ஏற்பாடு செய்து கொடுத்தனர். பின்னர் ரயில்வே பாதுகாப்புப்படை வீரரும், டிக்கெட் பரிசோதகரும் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அந்த வாலிபர் திருச்சியில் பயிற்சி டி.எஸ்.பி. ஆக உள்ள பி.மகேஷ்குமார் என்பதும், சென்னையில் இருந்து பயிற்சிக்காக திருச்சி சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை திருச்சி ரயில் நிலையத்தில் இறக்கி, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  அவரை கைது செய்து போலீசார் விசாரிக் கின்றனர்.

Related Stories: