தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கிட வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் கோரிக்கை

புதுடெல்லி:டெல்லி  வந்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை நேற்று சந்தித்து ஏழு கோரிக்கைகள் கொண்ட மனுவை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதேப்போன்று எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம்  மற்றும் இந்தியமுறை மருத்துவ படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து தொழிற்கல்வி இடங்களையும் நிரப்ப தமிழக அரசுக்கு அனுமதிக்க வேண்டும். கட்டுமானப் பணியை துரிதப்படுத்தி மதுரையில் எய்மஸ் மருத்துவமனையை உடனடியாக நிறுவிட வேண்டும். கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க அனுமதித்து அதுகுறித்த நடவடிக்கைய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் கருத்துக்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்கு விதிகளுக்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படுகிறது. இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும். இதற்காக சுமார் ரூ.2400 கோடி செலவாகும். உக்ரைனில் படித்த மாணவர்கள், இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளில் படிப்பை தொடர ஏதுவாக அனைத்து வழிவகையையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். அதேப்போன்று சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை அதாவது நீரிழிவு, உட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம் படிப்புகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: