சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் தொடரும் அகழாய்வு!: அழகிய சங்கு வளையல்கள், முத்து மணிகள் கண்டுபிடிப்பு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கு வளையல்கள், முத்து மணிகள் கண்டறியப்பட்டுள்ளன. வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல்மேட்டில் அகழாய்வுப்பணிகள் கடந்த 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் முன்னதாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல்மேட்டில் நுண் கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன. இதையடுத்து இங்கு அகழாய்வு நடத்த அரசு அறிவிப்பு வெளியிட்டு கடந்த 2 வாரங்களாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுவரை நடைபெற்ற அகழாய்வில்  அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கு வளையல்கள், முத்து மணிகள் கண்டறியப்பட்டிருப்பது தொல்லியல் ஆர்வலர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது. வெம்பக்கோட்டையில் தற்போது வரை 91 சென்டி மீட்டர் அளவில் இரு குழிகளும், 41 சென்டி மீட்டர் அளவில் ஒரு குழியும் தோண்டப்பட்டுள்ளன. இதில் இதுவரை முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், வண்ணப்பாசிகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது தொன்மையான மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Related Stories: