தமிழக கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்க வேண்டும்: மக்களவையில் திமுக எம்பி வலியுறுத்தல்

புதுடெல்லி: தென் சென்னை தொகுதி திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் நேற்று விதி எண் 377ன் கீழ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதில், ‘‘சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரையில் சுகாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு அமைக்க வேண்டும். கடற்கரைகள் ஒரு சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல், சிறிய கடல் உயிரினங்களின் வசிப்பிடமாகவும் விளங்குகின்றன. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட கடற்கரை சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் மேலாண்மை சேவை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை மெரினா மற்றும் எலியாட்ஸ் கடற்கரைகளில் கண்காணிப்பு கோபுரங்கள், அதிவேக மீட்புப் படகுகள், சுத்தமான, துர்நாற்றம் இல்லாத பயோ-டாய்லெட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீலாங்கரை மற்றும் கொட்டிவாக்கம் கடற்கரை மற்றும் தூத்துக்குடி, மாமல்லபுரத்திலும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரியில் நகராட்சி அமைப்புடன் இணைந்து பணி செயல்படுத்துகிறது. இதற்கு கூடுதலாக ரூ.100 கோடி நிதி தேவைப்படுகிறது. எனவே, தமிழக கடற்கரைகளை அழகுபடுத்த ரூ.100 கோடி நிதியை வழங்க வேண்டும். மேலும் தமிழக கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழும் வழங்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி வில்சன், ‘‘கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தல்களில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது கிடையாது. இதுபோன்ற அரசியலமைப்பு முட்டுக்கட்டையை நீக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரான ஓபிசிக்கு இடஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

மாநிலங்களவையில் திமுக எம்பி ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்வியில், ‘‘எல்.ஐ.சி போன்றவற்றின் பங்குகளை தனியாருக்கு கொடுத்தது போன்று ரயில்வே நிர்வாகத்தை தனியாருக்கு கொடுக்க ஏதேனும் ஒன்றிய அரசுக்கு திட்டம் இருக்கிறதா? ரயில் பெட்டிகள் மற்றும் அதற்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை புதுப்பிக்க அரசு திட்டமிட்டுள்ளதா’’ என்றார். இதற்கு பதிலளித்த  ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ், ‘‘ரயில்வே நிர்வாகத்தை தனியாருக்கு கொடுக்கும் எந்தவித திட்டமும் ஒன்றிய அரசுக்கு கிடையாது. ரயில் பெட்டிகள் உட்பட பொருட்கள் தயாரிப்பு, அதனை புதுப்பிப்பது ஆகியவைக்காக ரூ.2773.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, திமுக எம்பி எம்.சண்முகம், ‘‘வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புற்றுநோய் மருந்துகள் மற்றும் ஸ்டென்ட்  போன்ற மருத்துவ  சாதனங்களின் விலை ஏழை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உள்ளது. இவற்றின் விலையை குறைக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?’’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘‘முன்பு, புற்றுநோய் மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே பெற வேண்டியிருந்தது.

ஆனால் தற்போது உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் புற்றுநோய் மருத்துகளை தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுதவிர, தேவைக்கு ஏற்ப புற்றுநோய் மருந்துகள் இறக்குமதியும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு நிலையான விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், விலை உயர்ந்த 44 புற்றுநோய் மருந்துகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதாவது, ஒரு உற்பத்தியாளர் விநியோகஸ்தருக்கு விற்கும் முதல் விலையில் 60 சதவீதத்திற்கு மேல் அதிகபட்ச விலை (எம்ஆர்பி) இருக்கக் கூடாது என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருந்து விலை குறைந்து, புற்றுநோயாளிகளுக்கு பலன் கிடைத்துள்ளது’’ என்றார்.

Related Stories: