சக்தி வாய்ந்த ஆயுதங்களை வடகொரியா உருவாக்கும்: கிம் ஜோங் உன் அறிவிப்பு

சியோல்: ‘இன்னும் பலப்பல அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை உருவாக்க வட கொரியா  திட்டமிட்டு உள்ளது’ என்று வடகொரியா அதிபர் கிம் ஜோங்க் உன் அறிவித்துள்ளார். வடகொரியா கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய மற்றும் நீண்ட தூரம் செல்லும் அதிநவீன ஏவுகணையை கடந்த 24ம் தேதி சோதித்தது. அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமை படைத்த ஹவாசோங்- 17 என்ற  ஏவுகணை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இதனை பார்வையிட்ட கிம் ஜோங், ஏவுகணை திட்டத்தில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பாராட்டி பேசும்போது, ‘‘யாரிடம் ஆயுதங்கள் வலிமையாக இருக்கின்றனவோ, அவர்களை யாரும், எந்த நாடும் தாக்க மாட்டார்கள். எந்த நாட்டின் ராணுவமும் அவர்களை தாக்க பயப்படும். நாட்டை பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே போரை தடுத்து நிறுத்த முடியும். வடகொரியா தொடர்ந்து தன்னிடம் உள்ள ஆயுதங்களை செறிவூட்டும்.

இதனால் மட்டும்தான் வடகொரியாவால் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும். அமெரிக்கா கூட எங்களை தாக்க பயப்படுகிறது என்றால் அதற்கு இதுதான் காரணம். வட கொரியா இன்னும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை உருவாக்கும்’’ என்று அவர் கூறியதாக கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

Related Stories: