புள்ளம்பாடி ஜல்லிக்கட்டில் 15 வீரர்கள் காயம்

லால்குடி: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் பிரசித்தி பெற்ற குழுந்தாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன், பேரூராட்சி தலைவர் ஆலீஸ்செல்வராணி தொடங்கி வைத்தனர். இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 638 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காலை 8.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணி வரை நடைபெற்றது. காளைகள் முட்டியதில் 15 வீரர்கள் காயமடைந்தனர்.

இதில் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு திடலிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த 4 பேர் லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ரூ.6 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் முதல்பரிசு பெற்று சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அரியலூரை சேர்ந்த கரண் 2ம் இடத்தையும், புதுக்கோட்டையை சேர்ந்த மவுரிஸ் 3வது பரிசையும் பெற்றனர்.

Related Stories: