அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் விளையும் நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் விளையும் நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி, இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த அறநிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் குத்தகைக்கு பயிர் செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் நிலமற்ற ஏழை விவசாய கூலிகளாகவும், சிறு குறு விவசாயிகளாக உள்ளனர்.

மேலும் அந்த விவசாய நிலங்கள் அனைத்தும் கிராம பகுதிகளில் அமைந்துள்ளதாலும் அவற்றில் விளையும் நெல்லினை தொலைவில் இருக்கும் நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பதில் பெறும் சிரமங்கள் உள்ளதாலும் அறநிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு பயிரிடும் விவசாயிகள் நெல்லினை மற்ற விவசாயிகள் நெல்லினை கொள்முதல் செய்வதைப் போன்றே விரைந்து கொள்முதல் செய்யும் படி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்திடம் கேட்டுகொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேலாண் இயக்குநர் கடிதத்தில் விவசாயிகளின் நெல்லினை மத்திய அரசு நிர்ணய செய்த கே.எம்.எஸ். 2021/2022 பருவத்தின் குறைந்த ஆதார விலையுடன் (MSP) மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையும் (Incentive) சேர்த்து கழக விதிகளை பின்பற்றி கொள்முதல் செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  எனவே அனைத்து  இணை ஆணையர்கள்/ உதவிஆணையர்கள்/ செயல் அலுவலர்களும் இதனை பின்பற்றி இனிவரும் காலங்களில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Related Stories: