எனக்கு ஜனாதிபதி பதவியா? ஆர்எஸ்எஸ் பொய் பிரசாரம்: மாயாவதி பரபரப்பு குற்றச்சாட்டு

லக்னோ: ‘உபி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற உதவினால் தன்னை ஜனாதிபதியாக நியமிப்பதாக கூறப்படுவது, பாஜ, ஆர்எஸ்எஸ்.சின் பொய் பிரசாரம்,’ என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 403 தொகுதிகளில்  போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. கட்சியின் இந்த படுதோல்வி குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், மாயாவதி அளித்த பேட்டியில், `உபி.யில் இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) ஆட்சி அமையாவிட்டாலும், மாயாவதியை ஜனாதிபதி ஆக்குவோம்.

எனவே, பாஜ ஆட்சிக்கு வர உதவுங்கள் என்று பாஜ.வும், ஆர்எஸ்எஸ்.சும் திட்டமிட்டு, தவறான பொய் பிரசாரத்தை எங்கள் கட்சி தொண்டர்கள் இடையே பரப்பி உள்ளன. ஜனாதிபதியாக வேண்டும் என்று கனவில் கூட நான் நினைத்ததில்லை. இது போன்ற வாய்ப்பு கன்ஷிராமுக்கு வழங்கப்பட்ட போது, அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டார். அவருடை சிஷ்யையான நானும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்,’ என்று கூறினார். அவர் மேலும், ``ஜனாதிபதியாகும் வாய்ப்பை ஒத்து கொண்டால், கட்சியை இழுத்து மூட வேண்டி வரும் என்று தெரிந்தும், இந்த வாய்ப்பை எப்படி ஒப்புக் கொள்வேன்? எனவே, பகுஜன் சமான் கட்சியின் நலன், எதிர்காலம் கருதி, பாஜ.வின் ஜனாதிபதி வாய்ப்பை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்,’ என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: