கருப்பு கொடி சம்பவத்தில் மோதல்; காங். மாஜி முதல்வருக்கு ஓராண்டு சிறை: இந்தூர் நீதிமன்றம் அதிரடி

இந்தூர்: இந்தூரில் கருப்பு கொடி காட்டிய சம்பவத்தில் ஏற்பட்ட மோதல் வழக்கில், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்குக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 17ம் தேதியன்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கின் கான்வாய்க்கு, பாஜக நிர்வாகி ஜெயந்த் ராவ் என்பவர் கருப்புக் கொடி காட்டிவார். இதனால் கோபமடைந்த திக்விஜய் சிங்குக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இருதரப்பு மீதும் மாதவ் நகர் போலீசார் வழக்குபதிந்தனர். குறிப்பாக திக்விஜய் சிங் மட்டுமின்றி முன்னாள் எம்பி பிரேம்சந்திர குட்டு, தாரானா எம்எல்ஏ மகேஷ் பர்மர் உள்ளிட்டோர் மீதும் வழக்குபதியப்பட்டது. இவ்வழக்கு இந்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மற்றும் ஆறு பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும்  விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திக்விஜய் சிங்கின் வழக்கறிஞர் கூறுகையில், ‘10 ஆண்டு முன் தொடுக்கப்பட்ட பழமை வழக்கு; என்னை பொய்  வழக்கில் சிக்க வைத்தனர். எப்ஐஆரில் கூட என்னுடைய பெயர் முதலில் சேர்க்கவில்லை. பின்னர் அரசியல் அழுத்தத்தால் எனது பெயர்  சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.  தற்போது ஜாமீனில் வெளியே உள்ள திக்விஜய் சிங், உயர்  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார்’ என்றார்.

Related Stories: