பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை முழுமையாக வெளியேற்ற வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சரிடம் அஜித் தோவல் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘எல்லையில் அமைதியை நிலைநாட்டவும், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், கிழக்கு லடாக்கில் எஞ்சிய பகுதிகளில் இருந்து படைகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்’ என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தி உள்ளார்.

 கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி, கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றம் உருவானது.

இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. இதனால், இந்தியா, சீனா இடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட்டது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண இரு நாடுகளும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளிலும், கோக்ரா பகுதியிலும் கடந்தாண்டு படைகள் வாபஸ் பெறப்பட்டன. ஆனாலும், எஞ்சிய பகுதிகளில் தலா 50 ஆயிரம் வீரர்கள் இரு தரப்பிலும் அசல் எல்லைக் கோடு பகுதிகளில் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 11ம் தேதி நடந்த 15ம் கட்ட பேச்சுவார்த்தையில், படைகளை வாபஸ் பெறுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ திடீர் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஆப்கானிஸ்தான் சென்ற அவர் எந்த முன்னறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் டெல்லி வந்தார். நேற்று அவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து, எல்லைப் பிரச்னை குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கிழக்கு லடாக்கில் எஞ்சியிருக்கும் பகுதிகளில் இருந்து படைகளை விரைவாகவும், முழுமையாகவும் வெளியேற்ற வேண்டுமென தோவல் வலியுறுத்தினார்.  எல்லையில் அமைதியை நிலைநாட்டவும், பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கவும் இது உதவும் என்றும், இரு தரப்பு உறவும் இயல்பான போக்கை எட்ட, தடைகளை அகற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

நிலுவையில் உள்ள சிக்கல்லைகளை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய தோவல், சிக்கல்களைக் கையாள்வதில் முதிர்ச்சி மற்றும் நேர்மையின் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளார். சீன வெளியுறவு அமைச்சரின் முதல் முறையான இப்பயணத்தின் மூலம் கிழக்கு லடாக் பிரச்னை விரைவில் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சு மெதுவாகவே நடக்கிறது

அஜித் தோவலைத் தொடர்ந்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெங்சங்கரை, சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீ சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து பேட்டி அளித் ஜெய்சங்கர், ‘‘எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஆனால், அது விரும்பத்தக்கதை விட மெதுவாக நடந்து வருகின்றன. படைகளை வாபஸ் பெறுவதே இரு தரப்பு பேச்சுவார்த்தையின் மைய நோக்கமாக இருந்து வருகிறது.

இது, இனியும் தொடர வேண்டும். எல்லை பிரச்னை காரணமாக இரு தரப்பு உறவில் சமரசம் செய்ய முடியாது. அதே சமயம் எங்கள் இரு தரப்பு உறவு இப்போது சாதாரணமாக இல்லை என்பது உண்மைதான். இப்பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதே எங்களின் முழுமையான முயற்சி. வாங் யீ உடனான பேச்சுவார்த்தையின் போது எல்லைப் பிரச்னையில், எங்கள் தரப்பு உணர்வுகளை நேர்மையான முறையில் வெளிப்படுத்தி உள்ளேன்,’’ என்றார்.

Related Stories: