25 வயது நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி திடீர் ஓய்வு: டென்னிஸ் உலகம் அதிர்ச்சி

சிட்னி: உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லி பார்டி, 25 வயதில் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்திருப்பது டென்னிஸ் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து இரட்டையர் ஆட்டங்களில் தன்னுடன் விளையாடும் கேசி டெல்லாக்வாவிடம் பேசும் வீடியோவை ஆஷ்லி சமூக ஊடகத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் தனது ஓய்வை அறிவித்துள்ள அவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளதாவது: ஏற்கனவே ஒருமுறை தற்காலிகமாக ஓய்வை அறிவித்திருந்தாலும், இந்த முறை உறுதியாக இருப்பேன் என்று உரக்கச் சொல்கிறேன். இதை சொல்வது கடினமாகத்தான் இருக்கிறது.

ஆனால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சவால்களை  எதிர்கொள்ள மனதளவிலும்,  உடலளவிலும் போதுமான வலிமை என்னிடம் இல்லை. எல்லாவற்றையும் செலவழித்து விட்டேன். ஒரு சவாலை எதிர்கொண்டு வெற்றியைப் பெற எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். தற்போது அந்த உத்வேகம் என்னிடம் இல்லை என்று பலமுறை எனது குழுவினரிடம் சொல்லி இருக்கிறேன். உடலளவில் உழைப்பை வழங்க முடியாது. இந்த அழகான டென்னிஸ் விளையாட்டுக்கு  என்னிடம் உள்ள எல்லாவற்றையும் தந்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை அதுதான் எனது வெற்றி.

எல்லா இளம் பெண்களை போன்று நானும் வாழ்க்கையின் அனுபவத்தை பெற விரும்புகிறேன். இயல்பான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். இது வித்தியாசமான உணர்வை தருகிறது. டென்னிஸ் எனக்கு எல்லாம் தந்திருக்கிறது. அதற்காக டென்னிசுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன். இனி  எனது மற்ற கனவுகளை நிறைவேற்ற இந்த முடிவை எடுத்துள்ளேன். அதற்கு இதுவே சரியான நேரம். கடந்த ஆண்டு விம்பிள்டன் ஓபன் ஒரு வீராங்கனையாக என்னை நிறைய மாற்றிவிட்டது. உங்கள் வாழ்க்கை முழுவதும் எந்த இலக்கை அடைய கடினமாக உழைக்கிறீர்களோ... அதற்கான பலன் கிடைத்தது. விம்பிள்டன் வெல்ல வேண்டும் என்பது என் கனவு.

அதைதான் டென்னிஸ் வாழ்க்கையில் நான் விரும்பியது. அதன் பிறகு என்  முடிவை எடுக்கும் தைரியம் வந்தது.என் வாழ்க்கையின் சிறிய பகுதியில் மட்டும் இன்னும் மனநிறைவு அடையவில்லை. முழுமையாக நிறைவேறவில்லை.  என் டென்னிஸ் வாழ்க்கையின் 2ம் கட்டத்தில் என்னில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனது மகிழ்ச்சி முடிவுகளின் அடிப்படையில் இருப்பதில்லை. இந்த முடிவின் மூலம் சரியான வழியில் செல்கிறேனா, இல்லை தவறான வழியில்  செல்கிறேனா என்பது எனக்கு  தெரியாது. ஆனால் நான்  எனது வழியில் செல்கிறேன். இவ்வாறு ஆஷ்லி கூறியுள்ளார்.

மிக இளம் வயதிலேயே, அதிலும் நம்பர் 1 வீராங்கனையாக இருக்கும்போது ஆஷ்லி எடுத்த  முடிவு சக வீராங்கனைகள், ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாலெப், கரோலினா பிளிஸ்கோவா, குவித்தோவா, இங்கிலாந்து வீரர் மர்ரே உள்பட பலரும் கண்ணீருடன் வாழ்த்துகளையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளால்  மிகுந்த சோர்வு ஏற்படுவதாக ஆஷ்லி ஏற்கனவே கூறி வந்தார்.  பிரபலமாக இருப்பதால், சுதந்திரமாக வெளியில் சுற்றக் கூட முடியாமல் தவிப்பதாகவும் சொல்லியுள்ளார். கோல்ப் வீரர்  கேர்ரி கிஸ்ஸிக்கை (30) காதலித்து வந்தவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

* முதல் பட்டம்: குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஆஷ்லி, தனது 14வயதில் 2010 முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க  ஆரம்பித்தார்.  அடுத்த ஆண்டே விம்பிள்டன் ஓபனில் ஜூனியர் கிராண்ட் ஸ்லாம்  பட்டம் வென்றார்.

* ஏற்கனவே ஓய்வு: 2012ல் டென்னிஸ் இருந்து விலகினார். ‘இளம் பருவத்திற்கான அனுபவங்களை தவறவிடக் கூடாது என்பதற்காக தற்காலிகமாக அப்போது டென்னிசில் இருந்து விலகினேன்’ என்று பின்னர் காரணம் கூறினார்.

* கிரிக்கெட் வீராங்கனை: முதல் ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வீராங்கனையாக அவதாரம் எடுத்தார். ஆஸியில் நடக்கும் பிக் பாஷ் லீக்  டி20ல்  ‘பிரிஸ்பேன் ஹீட்’ அணிக்காக விளையாடினார். கொஞ்ச நாள் என்றாலும் அதிலும் ஆஷ்லி சாதித்துள்ளார்.

* மீண்டும் டென்னிஸ்: 2016 முதல் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2019 பிரெஞ்ச் ஓபனில் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். 2019 ஏப்ரலில் முதல் முறையாக உலக தரவரிசையில் டாப் 10ல் நுழைந்தார்.  அதே ஆண்டு ஜூனில் நம்பர் 1 அந்தஸ்தை பிடித்தார். அதன் பிறகு 2021ல் விம்பிள்டன்,  2022 ஜனவரியில் ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம்  பட்டங்களை வென்றார். 2018 யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2021 டோக்கியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றார்.

* கடந்த 114 வாரங்களாக  நம்பர் 1 வீராங்கனையாக தொடர்கிறார். இந்த வரிசையில் ஸ்டெபி கிராப் (186 வாரம்),  செரீனா வில்லியம்ஸ் (186 வாரம்),  மார்ட்டீனா நவரத்திலோவா (156 வாரம்) ஆகியோருக்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளார்.

Related Stories: