ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடுகிற ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டை எப்போதும் அனுமதிக்க மாட்டோம்: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

சட்டப்பேரவையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசியதாவது: ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தின் மூலம் தமிழகத்தில் இளைஞர்கள் பணம் சம்பாதிக்கும் ஆசையில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். பண இழப்பை தாங்க முடியாத சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  அதிமுக அரசு தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து கடந்த 2020 நவம்பர் மாதம் ஒரு அவசர சட்டத்தைப் பிறப்பித்தது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்பட்டது. எனினும், சென்னை உயர் நீதிமன்றம், 3.8.2021 ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்கு எதிராக அதிமுக அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்தது.

இதை தடுப்பதற்காக இந்த அரசு உடனடியாக புதிய சட்டம் கொண்டுவரும் வரை, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இடைக்கால தடை பெறவேண்டும்  என்று திமுக அரசை வற்புறுத்தி அதிமுக சார்பில் 4.8.2021 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது. எனவே சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில், மூத்த சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து, அப்பாவி இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி போன்று பணம் வைத்து மெய்நிகர் (வெர்சுவல் மோட்) முறையில் அல்லது சைபர்ஸ்பேசில் நடத்தப்படும் விளையாட்டுகளில் ஈடுபட்டு தங்களது பணத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து, ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சூழ்நிலையிலிருந்து காக்க தேவையான சட்டத்தினை காலம் தாழ்த்தாது, உடனடியாக இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதிலே தமிழக முதல்வருக்கு மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது. விளையாட்டாக இன்றைக்கு பல ஏழை குடும்பங்களின் வாழ்க்கையில் விளையாடுவதை நன்றாக அறிந்தவர். அதனால், பல வீடுகளிலே ஏழை, எளிய மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்து வாடும் சூழ்நிலையை முதல்வர் நன்கு அறிவார். இந்த சட்டம் அதிமுக ஆட்சியில் அவசரமாக கொண்டுவரப்பட்டது. எதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்ற குறிப்புகள் முறையாக இல்லை.

இதனால் நீங்கள் புதிய சட்டத்தை நிறைவேற்றி கொள்ளலாம் என்று கூறி வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், அரசு வழக்கறிஞர்களை ஆலோசித்த போது, இந்த சட்டத்திலேயே நாம் சரி செய்து விடலாம் என்ற கருத்தை தெரிவித்தனர். திமுக அரசு உச்ச நீதிமன்றத்திலே நீங்கள் கொண்டு வந்த சட்டத்தை நிலை நிறுத்துவதற்காக தான், நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறோம். எனவே, ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடுகிற ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் எந்த காலத்திலும் கூடாது.

அதற்கு, தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களை கொண்டே இன்றைக்கு திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஏழை, எளிய மக்களை காப்பாற்றும் வேலையை செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த சட்டம் கண்டிப்பாக கொண்டுவர வேண்டிய சட்டம். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால், இதற்கு மேல் சென்று அதை விவாதிக்க விரும்பவில்லை. நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு நடைமுறையில் இருக்கும் சட்டங்களை கொண்டு திமுக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றும் பணியை செய்து கொண்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: