விருத்தாசலம் அருகே உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்வேலிகள்-பொதுமக்கள் அச்சம்

விருத்தாசலம் : கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் தமிழகம் முழுவதும் 44 மண்டல ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.  விருத்தாசலத்தில் இயங்கிவரும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில் மணிலா, நெல், கம்பு, சோளம், முந்திரி, தென்னை, கொய்யா உள்ளிட்ட பயிர்கள் விதை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்காக  பயிரிடப்பட்டு வருகிறது.

புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் இங்கு வேலை செய்து வருகின்றனர்.  மேலும், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கால்நடைகளை இப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, முந்திரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் 150 ஏக்கர் நிலங்களை சுற்றி மின்சார கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

மின் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதால் கால்நடைகள் மட்டுமின்றி பொதுமக்களும் அப்பகுதிக்கு செல்லாத வகையில் உள்ளது. இது தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்தாலும், மின்வேலி என்பதால் உயிர் சேதம் ஏற்படும் அபாயத்தில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நிலங்களை சுற்றி கம்பி வேலிகளை உயரமாக அமைத்து பாதுகாக்கப்படலாம். அல்லது அவ்வாறு கட்டுப்பாடுகளை மீறி வருபவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியின் அருகிலேயே உள்ள இப்பகுதியில் மின் வேலிகள் அமைத்துள்ளது மிகப்பெரிய ‌‌அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மயில்கள், மான்கள் உள்ளிட்ட பல வனவிலங்குகளும் மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

மேலும் மண்டல ஆராய்ச்சி நிலைய பகுதிக்குள் வேலைசெய்யும் தொழிலாளிகளும் இதில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே உயிர் சேதங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். அதுவும் மின் வேலி அமைப்பது சட்டப்படி குற்றம் என இருந்தும் இப்பகுதியில் மின்வேலி அமைத்துள்ளது எந்தவகையில்  நியாயமா? என கேள்வி எழுப்பினர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: