சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அதன் பணிகளை சிறப்பாக செய்து வருவதாக குன்றக்குடி ஆதினம் பொன்னம்பலம் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார். சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயில் பால்குட திருவிழாவை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குன்றக்குடி ஆதினம் பொன்னம்பலம் ஆகியவர்கள் தொடங்கி வைத்தனர். திமுக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன்படி இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி தேர் செய்யும் பணிகளை அவர்கள் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய குன்றக்குடி ஆதினம் பொன்னம்பலம், கொரோனா பேரிடர் முடிந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய கோயில்களுக்கு குடமுழுக்கு விழாவையும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து வருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய பேரூர் ஆதினம், கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு அறநிலையத்துறையின் தளபதியாக அமைச்சர் சேகர்பாபு விளங்குவதாக புகழாரம் சூட்டினார்.
தாங்கள் இந்துக்கள் அல்ல சைவர்கள் என மதுரை ஆதினம் கூறியிருப்பது இந்திய அரசியலமைப்பை சார்ந்தது என்று தெரிவித்த அவர், இதில் அறநிலையத்துறை எதுவும் செய்யமுடியாது என்றார். மேகதாது அணை பிரச்சனையில், மாநில அரசின் உரிமைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்பொழுதும் விட்டுத்தர மாட்டார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், சிதம்பரம் நடராஜர் கோயிலில், இறை அன்பர்கள் அனைவரும் எந்தவித பிரச்னையும் இன்றி வழிபட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்யும் என உறுதியளித்தார்.