அரக்கோணம் அருகே போக்குவரத்து பாதிப்பு கம்பெனி வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளி பலி-இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்

அரக்கோணம் :  ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தை சேர்ந்தவர் குமார், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி(38). இவரக்ளது மகள்கள் தரணி, நளினி ஆகியோர் அங்குள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்1 மற்றும் 8ம் வகுப்பு படிக்கின்றனர். லட்சுமி, திருவள்ளூர் மாவட்டம் முப்பேடு அருகே உள்ள தனியார் தோல் கம்பெனியில் வேலை செய்து வந்தார். தினசரி கம்பெனி வேன் மூலம் வேலைக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம்.

இதேபோல் நேற்று முன்தினம் கம்பெனி வேனில் பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் பட்டுமுடையார் குப்பம் அருகே வந்தபோது வேன், திடீரென நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லட்சுமி உட்பட 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இறந்த லட்சுமியின் குடும்பத்தினருக்கு அரசு மற்றும் தனியார் கம்பெனி நிர்வாகம் சார்பில் நிதியுதவி கோரி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 100 பேர் நேற்று மின்னல் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலை கிராமத்தில் திரண்டு காலை 7 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மின்னல் ஊராட்சி மன்ற தலைவர் கோபி, ஒன்றிய கவுன்சிலர் கோமதி பிரசாத், துணைத்தலைவர் கிருஷ்ணவேணி விஜய் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு மற்றும் தனியார் கம்பெனி சார்பில் உடனடியாக நிதியுதவி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு தாலுகா இன்ஸ்பெக்டர் சேதுபதி, விஏஓ ராஜேஷ் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் கம்பெனி நிர்வாகத்திடமும் தொடர்புகொண்டு பேசினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் காரணமாக அப்பகுதி வழியாக செல்லும் அரக்கோணம்-சோளிங்கர், திருத்தணி-அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம்-குன்னத்தூர் வழியாக செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் மறியல் கைவிடப்பட்டதால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு தாமதமாக வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

Related Stories: