நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் பாக். நாடாளுமன்றம் 25ம் தேதி கூடுகிறது: பதவியை காப்பாற்ற இம்ரான் முயற்சி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பற்றி விவாதிப்பதற்காக வரும் 25ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்து வரும் கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் முட்டாஹிதியா குவாமி இயக்கம், பலுசிஸ்தான் அவாமி கட்சி, மெகா ஜனநாயக கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்நாட்டிப் தற்போது பொருளாதாரம் சீர்குலைந்து, விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதை தடுக்க தவறி விட்டதாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சிகள், பிரதமர் இம்கான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இதற்கான நோட்டீசை கடந்த 8ம் தேதி சபாநாயகரிடம் வழங்கின. இந்த நோட்டீசை வழங்கிய 14 நாட்களில், நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, இன்று நாடாளுமன்றம் கூட்டப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்குவதால், நாடாளுமன்றத்தை கூட்டுவது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற தலைமை செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றிய விவாதத்துக்காக வரும் 25ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும்,’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அடுத்த 3 முதல் 7 நாட்களில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதாக ஆளும் கூட்டணியை சேர்ந்த பிஎம்எல்-க்யூ கட்சியும், இம்ரானின் தெஹ்ரிக் கட்சியை சேர்ந்த 25 எம்பி.க்களும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் இம்ரான் ஈடுபட்டுள்ளார். இவர்களும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தால், இம்ரான் கான் ஆட்சியை இழக்க நேரிடும்.

இந்தியாவுக்கு பாராட்டு இம்ரான் திடீர் பாசம்: இந்தியாவை  எல்லா வகையிலும் விமர்சித்து வரும் இம்ரான் கான், நேற்று  இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாராட்டினார். தனது நாட்டில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘‘குவாட் அமைப்பில் இருந்த  போதிலும், அமெரிக்காவின் பொருளாதார தடைகளை பற்றி கவலைப்படாமல் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா  கச்சா எண்ணெய் வாங்கி இருக்கிறது. இந்தியா பின்பற்றி வரும் சுதந்திரமான  இந்த  வெளியுறவு கொள்கையை பாராட்டுகிறேன். இதேபோல்தான், எந்த வெளிநாடுகளுக்கும் தலை வணங்காமல் பாகிஸ்தான் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, எனது அரசும் தனி வெளியுறவு கொள்கையை வகுத்து செயல்படுகிறது,’’ என்றார்.

Related Stories: