தங்களின் நில புலஎண்கள், மண்வளத்தை அறிய தமிழ் மண் வளம் வெப்சைட் உருவாக்கப்படுகிறது: விவசாயிகளே தங்கள் நில விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: ‘தமிழ் மண் வளம்’ என்ற தனி இணைய முகப்பு தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும். இதனால், விவசாயிகளின்  நிலங்களின் புல எண் வாரியாக மண் வளத்தினைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும்  மண் வளப் பரிந்துரை அட்டையினையும் தாங்களே அச்சிட்டு கொள்ள முடியும் இதன்  மூலம் மண் வளத்திற்கேற்ற, வேளாண், தோட்டக்கலை, மரப்பயிர்கள் பரிந்துரை  செய்யப்படும்.

*  தொழில்நுட்பம் மூலம் நிலஉடைமை, பருவம் வாரியாக  பயிர்களின் சாகுபடிப் பரப்பு, வேளாண் சந்தை நுண்ணறிவுப் பிரிவின் மூலம்  விலை கணிக்கப்பட்டு, விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படும். இதன் மூலம் விளை  பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்கும்.

*  வேளாண்மை-உழவர் நலத்துறையின்  மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ், பயனாளிகளை  வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்திட, அனைத்து திட்டங்களிலும் படிப்படியாக  கணினியில் பயனாளிகளைப் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படும்.

*  விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், நடவுக்கன்றுகள், பழமரச்செடிகள், தென்னை  மரக்கன்றுகளை கணினியில் முன்கூட்டியே பதிவு செய்து காலத்தே சாகுபடி செய்ய  ஏற்பாடு செய்யப்படும்.

*  விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தங்களது  விவரங்களை நேரடியாகவோ, முகவர் மூலமாகவோ மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக  திறன் ரீதியாக புதிய செயலியில் பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்படும்.  இதன் மூலம் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வேளாண் சேவை நிறுவனங்கள்  மூலம் போதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, விவசாயப் பணிகளை உரிய  பருவத்தில் மேற்கொள்ளவும் இச்செயலி பயன்படும்.

*  விவசாயிகள் வேளாண்மை  விரிவாக்க மையங்களில் இடுபொருட்களைப் பெறும்போது, தங்கள் பங்களிப்புத்  தொகையினை இ-சலான், கிரெடிட் கார்ட், டெபிட் கார்டு, ஒருங்கிணைந்த பணப்  பரிவர்த்தனை மூலம் செலுத்த வழிவகை செய்யப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக  மாவட்டத்திற்கு ஒரு வட்டாரத்தில் செயல்படுத்தப்படும். இந்த புதிய மின்னணு  தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இத்திட்டம் ரூ.8 கோடி செலவில் ஒன்றிய, மாநில  அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

Related Stories: