வரும் 31ம் தேதிக்குள் ஆதார்-பான் இணைக்க தவறினால் அபராதம்

புதுடெல்லி: ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு வருகின்ற 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் ₹10ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு, பான் கார்டு முடக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நிதி மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக  ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மாதம் 31ம் தேதி ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாளாக அரசு அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் ₹10ஆயிரம் அபராத தொகையாக வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க தவறினால் பான் கார்டு முடக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறிப்பிட்ட கால கெடுவுக்குள் இரண்டு எண்களையும் இணைக்க தவறினால், வருமான வரி சட்டத்தின் கீழ் அதற்கான பின்விளைவுகளை கண்டிப்பாக எதிர்கொள்ள நேரிடும்’ என்று அறிவுறுத்தி உள்ளது.

பான்கார்டு செயலிழந்தால், சட்டப்படி பான் வழங்கபடவில்லை என்றும், வருமான வரி சட்டத்தின் கீழ் ₹10ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம். எனினும் வங்கி கணக்கை தொடங்குவது, ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிப்பது போன்ற வரியுடன் தொடர்பில்லாத நோக்கங்களுக்காக பான் கார்டை அடையாள சான்றாக பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படாது. ஆனால் செயல்படாத பான் எண்ணை பயன்படுத்தி தொடங்கப்பட்ட வங்கி கணக்கானது வருமான வரியின் கீழ் வரும் பரிவர்த்தனைகளை கொண்டிருந்தால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். ₹50ஆயிரத்துக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் அல்லது பணத்தை எடுத்தால் பான் எண் தேவைப்படும். பான், ஆதாரை இணைத்தவுடன் பான் கார்டு செயல்பாட்டிற்கு வரும். புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

Related Stories: