உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் கனடாவில் 3 ஆண்டு தங்கலாம் என அறிவிப்பு

மாண்ட்ரீல்: உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் கனடாவில் 3 ஆண்டுகள் தங்கலாம் என அந்நாட்டு தலைநகரம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்று 22வது நாளாக தொடர்கிறது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இந்த போர் காரணமாக மக்கள் பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் சமூக மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவற்றை குறி வைத்து ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதுவரையில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் போலந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இன்னும் பலர், அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்கள் கனடாவில் 3 ஆண்டுகள் தங்கலாம் என்று அந்நாட்டு தலைநகரான ஒட்டாவா அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்ய படையெடுப்பில் இருந்து வெளியேறும் உக்ரேனியர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், கனடாவில் 3 ஆண்டுகள் வரை தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கும். இதற்காக அவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் அவர்களது பயோமெட்ரிக் தரவுகளை கைரேகைகள் மற்றும் புகைப்பட வடிவில் வழங்க வேண்டும். வேலை மற்றும் படிப்பு அனுமதிக்கு ஒரே நேரத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கனடாவில் குடியேறிய உக்ரேனியர்களும் அவர்களது குடும்பங்களும் புதிய நடவடிக்கைகளால் பயனடைவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: