தமிழக முதல்வர் தொடங்கி வைத்த சென்னை புத்தக திருவிழாவில் ரூ.12 கோடிக்கு விற்பனை-நெல்லையில் சபாநாயகர் அப்பாவு தகவல்

நெல்லை : நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாளை. வஉசி மைதானத்தில் பொருநை நெல்லை புத்தக திருவிழா தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பாளை. அப்துல் வஹாப், நாங்குநேரி ரூபி  மனோகரன், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன்,  துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை  மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தக திருவிழாவை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து அரங்குகளை பார்வையிட்டு சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:

வரலாற்று சிறப்புமிக்க தாமிரபரணி மண்ணில் இந்த புத்தக திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் படிப்பறிவில் முதல் 10 இடங்களில் இருப்பதற்கு இங்குள்ள கல்வி நிறுவனங்கள் தான் காரணம். சென்னையில் முதல் புத்தக திருவிழா 1927ல் 22 அரங்குகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. கொரோனா தாக்குதலுக்கு பிறகு சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

இதில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டு ரூ.12  கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 16 நாட்களில் 15 லட்சம் பேர் சென்னை புத்தக திருவிழாவிற்கு வந்து சென்றுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற 9 மாதங்களில் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்ற பெருமையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். அவர் அறிவித்த மகளிர்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டத்தால் இன்று நாள் ஒன்றுக்கு 47 லட்சம் பெண்கள் இலவசமாக அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் முதல்வராக இருந்த போது கொண்டு வந்தார்.  ஆசியாவிலேயே இவ்வளவு பெரிய நூலகம் இல்லை என அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டன் பாராட்டினார். இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ரூ.99 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்க திட்டம் தீட்டியுள்ளார். விரைவில் இந்த நூலகத்தை முதல்வர் துவக்கி வைப்பார். இவ்வாறு சபாநாயகர் பேசினார்.

விழாவில் பேசிய அப்துல்வஹாப் எம்எல்ஏ, தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என புகழப்படும் நெல்லையில் சென்னையை தொடர்ந்து புத்தக திருவிழா நடத்துவது சிறப்புக்குரியது என்றார். நாங்குநேரி ரூபி மனேகரன் எம்எல்ஏ பேசுகையில், நாங்குநேரி தொகுதியில் 72 பஞ்சாயத்துகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என கலெக்டரை கேட்டுக் கொண்டார்.

மார்ச் 27ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும் புத்தக திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பதிப்பகங்கள் சார்பில் 110  அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  விழாவில் முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த்,  திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் மோகனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், நெல்லை ஆர்டிஓ சந்திரசேகர், மாநகராட்சி பாளை.

மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) ஐயப்பன், மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், தாசில்தார்கள் ஆவுடையப்பன், செல்வன், கந்தப்பன், ரஹ்மத்துல்லா, தாஸ்பிரியன், துணை தாசில்தார் மாரிராஜா, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர்கள் கணபதி சுப்பிரமணியன், ராஜேந்திரன், ஓய்வு பெற்ற நூலகர் முத்துகிருஷ்ணன், தென் இந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர் வயிரவன், செயலாளர் முருகன், திமுக பாளை. பகுதி செயலாளர் அண்டன் செல்லத்துரை, ராதாபுரம் ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, தகவல் தொழில்நுட்ப அணி நெல்லை தொகுதி ஒருங்கிணைப்பாளர் காசிமணி,  சதீஷ், டாஸ்மாக் தொமுச அரசன்ராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், லிங்கசாந்தி, ஜான்ஸ்ரூபா, மாநகராட்சி கவுன்சிலர்கள் டாக்டர் சங்கர், பவுல்ராஜ், அலிசேக்மன்சூர், பேச்சியம்மாள், அனுராதா சங்கரபாண்டியன், கோகுலவாணி,  சகாய ஜூலியட் மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் வரவேற்றார். பிஆர்ஓ ஜெய அருள்பதி நன்றி கூறினார்.

ராதாபுரம் தொகுதிக்கு இலவச பஸ் வசதி

விழாவில் பேசிய மாவட்ட பஞ். தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ், ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் புத்தக திருவிழாவை பார்க்க வர இலவசமாக பஸ் வசதி செய்து தரப்படும் என்றார். அதற்கு சபாநாயகர் அப்பாவு பாராட்டு தெரிவித்தார்.

விரைவில் பொருநை அருங்காட்சியகம்

கலெக்டர் விஷ்ணு பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் ரூ.15 கோடி செலவில் பிரமாண்ட பொருநை அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் இறுதி நிலையில் உள்ளது. விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார்.

Related Stories: