பெரம்பலூர் அருகே பரிதாபம் சென்டர் மீடியனில் பைக் மோதி காதலன் பலி, காதலி படுகாயம்-ரகசிய திருமணம் செய்து ஊர் திரும்பும்போது விபத்து

பெரம்பலூர் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ரகசியத் திருமணம் செய்து கொண்டு ஊர் திரும்பும் போது பெரம்பலூர்அருகே நடந்த விபத்தில் கபடி வீரரான காதலன் பலியானார். புதுத் தாலியுடன் சுய நினைவை இழந்த காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் டிவிகே நகர் வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் நவீன்குமார்(23). பிஎஸ்சி பயோ கேமிஸ்ட்ரி படித்து முடித்துவிட்டு போலீசில் சேர தனியார் கோச்சிங் சென்டரில் எழுத்துத் தேர்வுக்காக படித்து வந்தார். கபடி வீரரான நவீன் குமார் நேற்று அதிகாலை தனது தாய் ரேவதியிடம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் கபடி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடி விட்டு வருவதாக கூறிவிட்டு தனது பைக்கில் புறப்பட்டார்.

இந்நிலையில் பைக்கில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரிய செருவத்தூர் வடக்குத் தெரு, மெயின்ரோட்டில் வசிக்கும் தேவன் என்பவரது மகளான சந்தியா(19) என்பவருடன் பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக் குறிச்சி செல்வதற்காக அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். காதலர்களான இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வாலிகண்டபுரத்தை கடந்து செல்லும்போது தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பை கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் நவீன்குமார் தலையில், நெற்றியில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பின்னால் அமர்ந்து வந்த சந்தியா சுயநினைவு இழந்த நிலையில் தூக்கி வீசப்பட்டு அருகே கிடந்துள்ளார். தகவலறிந்து தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார், நவீன்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகவும், சந்தியாவை சிகிச்சைக்காகவும் பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இதனிடையே நேற்று மதியத்திற்குப் பிறகு தகவலறிந்து சந்தியாவின் சகோதரர் ஒருவர் வந்து கள்ளக்குறிச்சியில் சிகிச்சை அளித்து கொள்வதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றுவிட்டார். சந்தியா இன்னமும் வாய் திறந்து பேசாததால் இருவருக்கும் எப்போது திருமணம் நடந்திருக்கும் என்பது போலீசாருக்கு கேள்விக்குறியையும், குழப்பத்தை யும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: