நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் இன்று செங்கோல் வழங்கும் வைபவம்

நெல்லை : நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் இன்று கோயில் செயல் அலுவலருக்கு செங்கோல் வழங்கும் வைபவம் நடக்கிறது.தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிமையாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பங்குனி உத்திர திருவிழா உள் திருவிழாவாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 4ம் திருவிழாவான கடந்த 12ம்தேதி சுவாமி நெல்லையப்பர் தோன்றிய வரலாற்று நிகழ்வும், அதைதொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலாவும் நடந்தது. 7ம் திருவிழாவான 15ம்தேதி இரவு 8 மணிக்கு நடராஜர் சிவப்பு சாத்தி சப்பரத்திலும், தொடர்ந்து 9 மணிக்கு வெள்ளை சாத்தி சப்பரத்திலும் எழுந்தருளினார்.

8ம் திருவிழாவான 16ம்தேதி காலை 7 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து 9ம்திருவிழா நேற்று காலையில் சுவாமி சந்திரசேகர், பவானி அம்பாள் செப்பு தேரில் ரதவீதிகளில் வலம் வரும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 10ம் திருவிழாவான இன்று (18ம்தேதி) காலை அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி வைபவம், தொடர்ந்து பங்குனி உத்திர சிறப்பு ஹோமம், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் காந்திமதி அம்மன் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும் தொடர்ந்து பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் வைபவமும் நடக்கிறது. இந்நிகழ்வில் கோயில் நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டி அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் செயல் அலுவலர் ஆகியோரிடம் சுவாமியின் திருப்பாதம், வெள்ளி செங்கோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு மண்டபத்தை மூன்று முறை வலம்வரும் வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: