சென்னை: பொதுமக்கள் கொடுக்கும் புகாரின்மீது உரிய விசாரணை நடத்தி, அவர்களது குறைகளை களைய செய்ய வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காஞ்சிபுரம் சரக காவல்துறை கூட்டத்தில் கலந்து கொண்டார். அவருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, வடக்கு மண்டலம் ஐஜி சந்தோஷ்பாபு, டிஐஜி சத்யபிரியா, எஸ்பிக்கள் காஞ்சிபுரம் சுதாகர், திருவள்ளூர் வருண்குமார், செங்கல்பட்டு அரவிந்தன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கூட்டத்தில், குற்றங்களை தடுக்க போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள், நடவடிக்கைகளை மேம்படுத்துவது, பழைய குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள், அதற்கான வழிகாட்டுதல் ஆலோசனைகள், ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
