சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் டிடிவி.தினகரன் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை மாவட்டம் மேலூரில் அமமுக என்ற புதிய அரசியல் அமைப்பை தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்ட பொழுது அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப்பொதுச்செயலாளராக டிடிவி.தினகரனும் பொறுப்பு வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அமமுக தொடங்கி 4 ஆண்டுகள் முடிவு பெற்றதையடுத்து 5ம் ஆண்டு துவக்க விழா நேற்று ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. க
ட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கட்சி கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர், கட்சி அலுவலகத்தில் உள்ள பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெற்றி, தோல்விகளை சமமான மனநிலையோடு அணுக வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எங்களுக்கு நல்லதொரு தொடக்கமாக அமைந்துள்ளது. அரசியல் என்பது போர்க்களம். யாரும் கட்சியை விட்டு சென்றுவிட்டார்கள் என்பதற்காக நான் வருத்தப்பட்டது கிடையாது. அடுத்தவர்களை நம்பி நான் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஒருவேளை அதிமுகவுடன் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களின் விருப்பப்படி செயல்படுவேன். அமமுகவை நான் விரும்பி ஆரம்பிக்கவில்லை. வேறு வழியில்லாமல் தான் கட்சியை ஆரம்பித்து அதிமுகவை எதிர்த்தோம். இவ்வாறு அவர் கூறினார்.