ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக இஸ்லாமிய மாணவிகள் அறிவிப்பு

பெங்களூரு: ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக இஸ்லாமிய மாணவிகள் அறிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஹிஜாப் அணிய கல்லூரி நிர்வாக குழு, கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே கல்லூரியை சேர்ந்த 6 மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கடந்த ஜனவரி 1ம் தேதி மாநிலம் முழுவதும் இந்துத்துவா ஆதரவு மாணவர்கள், காவி துண்டு அணிந்து, ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர். அதே சமயம் ஹிஜாபுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் வெடித்தது.

இந்நிலையில், ஜனவரி 31ம் தேதி ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் உடுப்பி கல்லூரி மாணவிகள் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், பிப். 5ம் தேதி கர்நாடக அரசு, சீருடை தொடர்பாக அனைத்து கல்லூரிக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அதில், தனியார் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கும் சீருடையை அணிந்து வரலாம். அதேசமயம் அரசு மேல்நிலை பள்ளியில் கல்லூரி நிர்வாக குழு வழிகாட்டும் சீருடையை மட்டும் அணிந்து வரவேண்டும். ஒருவேளை வழிகாட்டுதல் இல்லை என்றால் சமத்துவம் மற்றும் ஒற்றுமையை பறைசாற்றும் சீருடையை மட்டுமே அணிந்து வரவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பிப். 8ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பரவலாக ஹிஜாப் எதிர்ப்பு மற்றும் ஆதரவு போராட்டம் வன்முறையில் முடிந்தது.

இதனால் பல்வேறு கல்லூரிகள் தொடர்ந்து விடுமுறை அறிவித்தன. இந்நிலையில், பிப்ரவரி 8ம் தேதி கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி கிருஷ்ணா தீக்சித், ஹிஜாப் தடைக்கு எதிரான மனுவின் மீதான விசாரணையை தொடங்கினார். இந்த வழக்கை கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரணைக்கு பரிந்துரை செய்வதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில், தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, கிருஷ்ணா தீக்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் கொண்ட அமர்வு முன், பிப்ரவரி 10ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத அடையாளம் சார்ந்த உடைகளை மாணவர்கள் கல்லூரிக்குள் அணிந்து வர தடைவிதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மார்ச் 15ம் தேதி (இன்று) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தீர்ப்பு யாருக்கு சாதக-பாதகமாக வந்தாலும் கலவரம் நடக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மைசூரு, மங்களுரு, கல்புர்கி, ஷிவமொக்கா, சிக்கமகளுரு, உடுப்பி, தார்வார், கோலார், துமகூரு உட்பட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 144  தடை உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறபித்துள்ளனர். தடை உத்தரவு அமலில் உள்ள மாவட்டங்களில் போராட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க மாவட்ட எஸ்பிகளுக்கு ஐஜி மற்றும் டிஜிபி பிரவீன் சூட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சரியாக 10.30 மணியளவில் நீதிபதிகள், தங்களது இருக்கைகளில் அமர்ந்து தீர்ப்பை வாசிக்க தொடங்கினர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில்அவசியமான ஒன்றல்ல. அரசு பள்ளிகளில் ஒரே சீருடை அணிந்து வர வேண்டும் என்ற கர்நாடகா மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவு செல்லும்’ என்று கூறியுள்ளனர். இந்நிலையில் ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக இஸ்லாமிய மாணவிகள் அறிவித்துள்ளனர். நீதிமன்றங்கள் மற்றும் சட்டத்தின் மீது மாணவிகள் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories: