சென்னை: அமமுக 5ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றினார். அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிளவு காரணமாக அக்கட்சியில் இருந்து சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் நீக்கப்பட்டனர். இதேபோல், டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த பல முக்கிய நிர்வாகிகளையும் அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ், எடப்பாடி நடவடிக்கை எடுத்தனர். இதனால், டிடிவி.தினகரன் திட்டமிட்டு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை மாவட்டம் மேலூரில் அமமுக என்ற புதிய அரசியல் அமைப்பை தொடங்கினார்.
கட்சி தொடங்கப்பட்ட பொழுது அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப்பொதுச்செயலாளராக டிடிவி.தினகரனும் பொறுப்பு வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த 2019ம் ஆண்டு அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில், அமமுக தொடங்கி 4 ஆண்டுகள் முடிவு பெற்றுதையடுத்து 5ம் ஆண்டு துவக்க விழா இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கட்சி கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர், கட்சி அலுவலகத்தில் உள்ள பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், டிடிவி.தினகரன் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: காவிரி பிரச்னைக்கு போராட்டம் நடத்திய போது அமமுக போராட்டத்திற்காகவே தொடங்கப்பட்ட இயக்கம் என்று நான் கூறினேன். அந்தவகையில், நம்முடைய இலக்கை நோக்கி நாம் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம். மேலூரில் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக நிச்சயம் உங்களுடன் சேர்ந்து போராடுவேன். இவ்வாறு கூறினார்.