பேஸ்புக்கில் விதிமீறல் பதிவு; புடினை கொன்றால் ரூ7.67 கோடி: மெட்டா தலைவர் எச்சரிக்கை

மாஸ்கோ: பேஸ்புக்கில் ரஷ்ய அதிபர் புடினை கொன்றால் ரூ. 7.67 கோடி பரிசு அளிப்பதாக வெளியிட்ட பதிவுக்கு, மெட்டா நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக், இஸ்டாகிராமின் தாய் நிறுவனமாக  ‘மெட்டா’ விளங்கி வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட உள்ளடக்கக்  கொள்கை முடிவுகளின் அடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யாவில்  பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. மேலும் ரஷ்ய  வர்த்தக விளம்பரங்களையும் முடக்கியது.

ரஷ்ய ஆதரவு பதிவுகளையும் நீக்கியது. இந்நிலையில் ரஷ்ய அதிபருக்கு எதிராக சிலர் கொலை மிரட்டல் பதிவுகளை பேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் ரஷ்ய அதிபர் புடினை கொன்றால் 1,000,000 அமெரிக்கன் டாலர் (இந்திய ரூபாயில் 7,67,18,000) பரிசுத் தொகை வழங்கப்படும் என்று, புடினின் புகைப்படத்துடன் பதிவுகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ‘மெட்டா’வின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் நிக் கிளெக் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷ்யர்களுக்கு எதிரான பாகுபாடு, துன்புறுத்தல் அல்லது வன்முறையை ஏற்க முடியாது.

ஒரு நாட்டின் தலைவரைப் படுகொலை செய்வதற்கான அழைப்புகளை நாங்கள் எங்களது தளங்களில் அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியுள்ளார். அவரது அறிக்கையில் ரஷ்ய அதிபர் புடினின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: