வருசநாடு அருகே சாலை வசதி இல்லாததால் மலைக்கிராம மக்கள் அவதி

வருசநாடு : வருசநாடு அருகே, சாலை வசதி இல்லாததால், மலைக்கிராம மக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் முத்துநகர், காந்தி கிராமம், ஐந்தரைபுலி, அண்ணாநகர் கோடாலி ஊத்து, முத்துராஜபுரம், தண்டியகுளம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த ஊர்களுக்கு சென்று வருவதற்கு போதிய தார்ச்சாலை வசதியில்லை. இதனால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஆண்டி என்பவர் கூறுகையில், ‘சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், மருத்துவமனைகளுக்கு செல்லும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் மலை கிராமங்களுக்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும்’ என்றார்.

இது குறித்து தும்மக்குண்டு ஊராட்சி தலைவர் பொன்னழகு சின்னக்காளை கூறுகையில், ‘ தார்ச்சாலை அமைக்க சில பகுதிகளில் வனத்துறை அனுமதி தரவில்லை. இதனால், தார்ச்சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. வனத்துறைக்கு கட்டுப்பட்ட இடங்களை ஒதுக்கிவிட்டு, பாக்கியுள்ள இடங்களை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தால், புதிய தார்ச்சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: