நீர்நிலைகள் செப்பனிடுதல், புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 185 ஏரிகளை புனரமைக்க முடிவு: ஒன்றிய அரசின் நிதியுதவியை பெறும் முனைப்பில் தமிழக அரசு

சென்னை: நீர்நிலைகளை செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 185 ஏரிகளை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் உள்ளது. இதில், பாசனத்துக்கு பயன்படும் 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் புனரமைக்கப்படாத ஏரிகளை அடையாளம் கண்டு, மீண்டும் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணிகளுக்காக ஒன்றிய, மாநில அரசின் பங்களிப்போடு பிரதான் மந்திரி கிரிஷி சின்சாயி யோஜானா திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் (ஆர்ஆர்ஆர்) மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்காக வறட்சி பாதித்த மாவட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் அடையாளம் கண்டு அந்த ஏரிகள் புனரமைக்கப்படுகிறது. 60-40 சதவீதம் என்கிற அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உட்பட 7 மாவட்டங்களில் 115 ஏரிகளில் புனரமைப்பு பணிக்கு ஒன்றிய நீர்வள ஆணையத்திடம் தமிழக அரசின் நீர்வளத்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், 2022-23ம் ஆண்டில் மாநிலத்தில் 185 ஏரிகளை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நீர்வளத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அறிக்கை விரைவில் பெறப்பட்டு அடுத்த மாதத்துக்குள் ஒன்றிய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து, இது போன்று தேசிய வேளாண்மை திட்டம், சொட்டு நீர் பாசன திட்டம், சிறு,குறு, முக்கிய பாசன திட்டம் உட்பட பல்வேறு திட்டத்தின் மூலம் வரும் ஒன்றிய அரசின் நிதியை பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: