உக்ரைன் ராணுவத்தில் இணைந்த மாணவர் கோவை திரும்ப சம்மதம்: செல்போனில் பெற்றோர் பேசியதில் மனம் மாறினார்

கோவை:  உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றும் மாணவர் கோவைக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார். கோவை துடியலூர் அருகே சுப்ரமணியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). பர்னிச்சர் கடை வியாபாரி. இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களது  மூத்த மகன் சாய் நிகேஷ் (22), 2018 செப்டம்பரில் உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் உள்ள தேசிய விண்வெளி அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு படிக்க சென்றார். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், சாய் நிகேஷ் அங்குள்ள ராணுவத்தில் சேர்ந்தது தெரிய வந்தது. பெற்றோர் அவரை ஊருக்கு அழைத்தபோது, இந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா திரும்பும்படி பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தியதால் சாய் நிகேஷ் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தார். எனவே அவரது நிலை குறித்து எந்த தகவலும் தெரியாமல் இருந்து வந்தது. இந்திய வெளியுறவுத்துறை மூலம் மகனை கோவைக்கு அழைத்து வர பெற்றோர் முயற்சித்தனர். இந்நிலையில் சமீபத்தில் சாய் நிகேஷை அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் தான் பத்திரமாக இருப்பதாகவும், ராணுவ பணியில் இருப்பதாகவும் தெரிவித்தார். பெற்றோர், ‘‘நீ உடனே கோவைக்கு வரவேண்டும். நாங்கள் கவலையோடு இருக்கிறோம். உன்னை நேரில் பார்க்கவேண்டும்’’ என்றனர். இதற்கு சாய் நிகேஷ் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் சாய் நிகேஷை கோவைக்கு அழைத்து வர உதவி கேட்டுள்ளனர். விரைவில் சாய் நிகேஷ் கோவைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: