ஆம்பூர் அருகே வீராங்குப்பத்தில் எருது விடும் விழாவில் காளைகள் முட்டி 10 பேர் காயம்-முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது

ஆம்பூர் : ஆம்பூர் அருகே வீராங்குப்பத்தில் நேற்று நடந்த எருது விடும் திருவிழாவில் காளைகள் முட்டியதில் 10 பேர்  காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆம்பூர் அடுத்த வீராங்குப்பத்தில் சாமுண்டியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த மாதம் எருது விடும் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மறுநாள் நடக்க இருந்த எருது விடும் திருவிழாவை தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அதிகாரிகள் நிறுத்தினர். இதனால் அப்பகுதியினர் சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து வாணியம்பாடி ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ காயத்ரி சுப்பிரமணி தலைமையில் அமைதி கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் தேர்தலுக்கு பின்னர் எருது விடும் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று வீராங்குப்பத்தில் எருது விடும் திருவிழா விழாக்குழு தலைவர் பழனி தலைமையில் நடந்தது. ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் யுவராணி உள்ளிட்ட 84 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாசில்தார் பழனி அங்கு நடந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த விழாவில் ஆம்பூர், பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஜோலார் பேட்டை, வேலூர், கேவி குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 எருதுகள் பங்கேற்றன. இந்த விழாவில் காளைகள் ஓடும் போது முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

Related Stories: