பெண்கள் மீது ஏறிச்சென்ற பண்ணாரி அம்மன் சப்பரம்

ஈரோடு: சாலையில் படுத்து வணங்கிய பெண்கள் மீது திருவீதி உலா வந்த பண்ணாரியம்மன் கோயில் சப்பரம் ஏறிச்சென்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா வரும் 21, 22ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, பண்ணாரி அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா சுற்று வட்டார கிராமங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று காலை சத்தியமங்கலம் அருகே உள்ள இக்கரை நெகமம் புதூரில் திருவீதி உலா நடைபெற்றது.

அம்மன் சப்பரம் கிராமத்தில் உள்ள சாலை வழியாக சென்றபோது கிராம பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாண்கிடையாக நீண்ட வரிசையில் சாலையில் விழுந்து அம்மனை வணங்கினர். அப்போது, பண்ணாரி அம்மன் சப்பரம் சாலையில் விழுந்து வணங்கிய பெண்கள் மீது சென்றது. இதைத்தொடர்ந்து, வெள்ளியம்பாளையம் தயிர்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, பழைய கொத்தமங்கலம், பகுடுதுறை, முடுக்கன்துறை கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து, பண்ணாரி அம்மன் சப்பரம் தொட்டம்பாளையம் கிராமத்தை சென்றடைந்தது. இன்று (11ம் தேதி) தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர், இக்கரை தத்தப்பள்ளி, அக்கரை தத்தப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது.

Related Stories: