திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் சீர்திருத்தம்: ஆணையர் குமரகுருபரன் அதிரடி

சென்னை: தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திரிசுதந்திரர்களை வரன்முறை படுத்துதல், தரிசன வரிசைகளை சீரமைத்தல் குறித்து மேற்கொள்ளப்படவேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து உரிய அனுமதி வழங்கும்படி இணை ஆணையர் அறிக்கையில் அனுமதி கோரப்பட்டுள்ளது.  

திரிசுதந்திரர்களை முறைப்படுத்துதல்:

* கோயிலின் நடைமுறையிலுள்ள பழக்கவழக்கங்களின் படி கைங்கர்யம் செய்வதற்கு திரிசுதந்திரர்கள் முழு விவரங்களுடன் முறையாக விண்ணப்பித்து தங்களது பெயரை கோயில் நிர்வாகத்திடம் பதிவுசெய்து கொள்ள வேண்டும். நிபந்தனைகளுக்குட்பட்டு அடையாள அட்டைவழங்கப்பட வேண்டும்.

* அடையாள அட்டை பெற்ற திரிசுதந்திரர்கள் கைங்கர்யம் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  கோயில் வளாகத்தில் கையிறு, விபூதி முதலியவை விற்பனை செய்யக் கூடாது.

* கைங்கரியம் செய்ய அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே கோயிலுக்குள் நுழைய வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும். அனுமதி வழங்கப்பட்ட திரிசுதந்திரர்களுக்கு கைங்கரிய முறைகள் சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 திரிசுதந்திரர்கள் மட்டும் கைங்கர்யம் செய்ய அனுமதிக்கப்படுவர். திரிசுதந்திரர்களுக்கு பேஸ் டிடெக்டர் முறையில் வருகைப்பதிவேடு பதிவு செய்யப்பட வேண்டும்.

வரிசைகளை முறைப்படுத்துதல் :

* தற்போது கோயிலில் இலவச தரிசனம், ரூ.20, ரூ.100 மற்றும் ரூ.250 கட்டண தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து இலவச தரிசனமும். ரூ.100 கட்டண தரிசனம் மட்டும் 9.3.2022லிருந்து செயல்படுத்திட இணை ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது.

* 9.3.2022லிருந்து ரூ.20 மற்றும் ரூ.250க்கான கட்டண தரிசனங்கள் ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது .

* இந்த உத்தரவுப்படி 2 வகையான தரிசனங்களை மட்டும் நடைமுறை படுத்தும்போது, வரிசையில் வரும் பக்தர்களுக்கு நீர், மோர் முதலியவை வழங்கவும், உட்கார நாற்காலிகள் ஏற்பாடு செய்ய இணை ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: