வெற்றிலையில் 1330 திருக்குறள் எழுதி தமிழ் ஆசிரியை சாதனை: கின்னஸ் புத்தகத்துக்கு முயற்சி

திருப்போரூர்: வெற்றிலையில் 1330 திருக்குறளை எழுதிய அரசு பள்ளி தமிழ் ஆசிரியைக்கு, பாராட்டு குவிந்து வருகிறது. இவரது சாதனை கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சி அகோர வீரபத்திரசுவாமி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். மனநலன் பாதிக்கப்பட்டவர்களை இங்கு அழைத்து வந்து, இரவு தங்க வைத்து வேண்டி கொண்டால், நோய் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் இக்கோயிலுக்கு வந்து செல்வதால் அனுமந்தபுரம் பிரபலமான ஊராக அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு ஊர், தற்போது உலகளவில் புகழ்பெறும் வகையில், மற்றொரு சாதனையை படைத்துள்ளது.

அனுமந்தபுரம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், நாகப்பட்டினத்தை சேர்ந்த சீதளாதேவி (42), தமிழ் ஆசிரியையாக பணியாற்றுகிறார். அவர், குழந்தையாக இருந்தபோது கிருபானந்த வாரியாரின் மடியில் தவழ்ந்து வளர்ந்த அவர், தமிழில் முதுகலை பட்டம் முடித்து, கடந்த 2012ம் ஆண்டு அரசு பள்ளியில், தமிழ ஆசிரியையாக பொறுப்பேற்று அனுமந்தபுரத்திற்கு வந்தார். திருக்குறள் மீது ஆர்வம் கொண்ட சீதளாதேவி, 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்று, அதனை மாணவர்களுக்கும் போதிக்கும் பணியையும் செய்து வந்தார்.

இதைதொடர்ந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என ஒற்றை கோரிக்கையை முன் வைத்து அவர், பல்வேறு திருக்குறள் தொடர்பான சாதனைகளை செய்து வருகிறார். ஐஸ் குச்சி எனப்படும் மூங்கில் பட்டைகளை சேகரித்து, 223 குச்சிகளில் 1330 திருக்குறள்களை 19 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்தார். மேலும் உலகளவில் திருக்குரளை பிரபலப்படுத்தும் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். கடந்த 2020ம் ஆண்டு கரும்பலகைகளில் எழுதப் பயன்படும் 268 சாக்பீஸ்களில், 12.5 மணிநேரத்தில் 1330 குறள்களையும் எழுதி சாதனை படைத்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் வெற்றிலையில் 1330 குறள்களையும் எழுதி சாதனை படைக்க முயற்சித்து வெற்றி கண்டுள்ளாம்ா. 43 வெற்றிலைகளை இதற்காக பயன்படுத்திய சீதளாதேவி, அதற்காக 20 மணி நேரமே எடுத்து கொண்டார். ஆரம்பத்தில் வெற்றிலையில் எழுதத் தொடங்கியபோது பேனா மையின் சூடு தாங்காமல் வெற்றிலை வாடி விட்டதாகவும், இதையடுத்து ஆசிரியர் ஒருவரிடம் ஆலோசனை பெற்று வெற்றிலையை பிரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தக நிறுவனத்துக்கு அனுப்பியதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரது இந்த சாதனை தற்போது வெளியுலகத்துக்கு தெரியவந்தது.

இதையடுத்து, திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, நேற்று நேரடியாக அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று, ஆசிரியை சீதளாதேவிக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் அளித்து வாழ்த்து பாராட்டும் தெரிவித்தார். தொடர்ந்து அனுமந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி சூர்யகுமார் தலைமையில் கிராம மக்களும், தலைமை ஆசிரியர் நேரு தலைமையில் சக ஆசிரியர்களும் சாதனை புரிந்த ஆசிரியை சீதளாதேவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, அனுமந்தபுரம் ஆசிரியை சீதளாதேவியின் சாதனை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய அங்கீகாரத்தை பெற்று தருவதாக உறுதியளித்தார்.

Related Stories: