பந்தா போன் எல்லாம் இனி தேவையில்லை சாதாரண செல்போனில் கூட பண பரிமாற்றம் செய்யலாம்: புதிய யுபிஐ சேவை அறிமுகம்

மும்பை: சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை செய்வதற்கான. ‘யுபிஐ-123 பே’ சேவையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் டிஜிட்டல் சேவை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆண்ட்ராய்டு செல்போனில் வங்கிப் பணி பரிமாற்றம் எளிதாக நடக்கிறது. ஆனால், இந்த வகை செல்போன்களை வாங்க முடியாத சாதாரண மக்களால், இந்த டிஜிட்டல் நவீன மயத்தில் பங்கேற்க முடியவில்லை. இதனால், சாதாரண செல்போன்களை வைத்துள்ள சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையிலான யுபிஐ டிஜிட்டல் நிதி சேவை விரைவில் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, சாதாரண செல்போன்களை அதாவது பட்டன் செல்போன் பயன்படுத்தும் 40 கோடி வாடிக்கையாளர்களுக்கு உதவ, புதிய யுபிஐ சேவையை ரிசர்வ் வங்கி நேற்று அறிமுகம் செய்தது.

‘யுபிஐ-123 பே’ எனப்படும் சாதாரண செல்போன்களுக்கான யுபிஐ சேவையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று அறிமுகம் செய்தார். அத்துடன் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கான 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணையும் தொடங்கி வைத்தார். இதற்கு `டிஜிசாதி’ எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இந்த சேவை மூலம் சாதாரண செல்போன்கள் வைத்துள்ளவர்களும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் பங்கேற்க முடியும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். சாதாரண செல்போன் வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தங்களது வங்கி கணக்குடன் முன்கூட்டியே இந்த ‘யுபிஐ-123 பே’ சேவையைப் பயன்படுத்த இணைத்திருந்தால் மட்டும் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், கிராம புறங்களில் உள்ளவர்களுக்கும் டிஜிட்டல் பொருளாதாரம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

‘யுபிஐ 123 பே’க்கு இதுதான் அர்த்தம்

சாதாரண செல்போன்களில் பண பரிமாற்றம் செய்யும் ஆப்க்கு, ‘யுபிஐ123 பே’ என பெயரிடப்பட்டு இருப்பதற்கு எளிதான உள்ளர்த்தம் உள்ளது.

* அழை

* தேர்வு செய்

* பணம் செலுத்து - இந்த 3 எளிய நடைமுறையை புரிய வைப்பதற்கே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பயன்படுத்துவது எப்படி?

* சாதாரண போன் வைத்திருப்பவர்கள், முதலில் தங்களின் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.

* டெபிட் கார்டு எண்ணை உள்ளீடு செய்து, யுபிஐ பாஸ்வேர்டு உருவாக்க வேண்டும். அதன்பிறகு பரிவர்த்தனை செய்யலாம்.

* பணம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரது மொபைல் எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.

* பின்னர், அனுப்ப வேண்டிய பணத்தை உள்ளீடு செய்து, பாஸ்வேர்டு போட்டால் பணம் பரிவர்த்தனை ஆகிவிடும்.

* இது தவிர, சாதாரண போனில் இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஆப்ஸ் மூலமாகவும், பணம் அனுப்பலாம். காஸ் பில், மொபைல் ரீசார்ஜ் செய்யலாம். வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம்.

* இன்டர்நெட்

தேவையில்லை

ஸ்மார்ட்போன் ஸ்கேன் அண்ட் பே செய்யப்படும் அனைத்து இடங்களிலும் பட்டன் போன் வைத்துள்ளவர்கள் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்தச் சேவையைப் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு தேவையில்லை.

Related Stories: