1.5 லட்சம் வீரர்கள் களத்தில் குவிக்கப்பட்டும்; உக்ரைனில் சிரியா கூலிப்படை அட்டகாசம்: ரஷ்யாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம்

வாஷிங்டன்: உக்ரைனில் 1.5 லட்சம் வீரர்களை ரஷ்ய குவித்துள்ள நிலையில், வெளிநாட்டை சேர்ந்த கூலிப்படை, போராளிகளை ரஷ்யா களத்தில் இறக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதலால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளாகி உள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் விவகாரம் பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. இதற்கிடையே உக்ரைன் - ரஷ்யா மோதலை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ‘ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் நாட்டிற்குள் வெளிநாடுகளை சேர்ந்த போராளிகளை களமிறக்க திட்டமிட்டுள்ளார். குறிப்பாக சிரியாவில் செயல்படும் போராளிகளை உக்ரைன் போர் களத்தில் சேர்த்துள்ளார். உக்ரைனில் எத்தனை சிரியா போராளிகள் களத்தில் உள்ளனர் என்பது தெரியவில்லை என்றாலும், சில போராளிகள் ஏற்கனவே ரஷ்யாவில் முகாமிட்டு அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூலிப்படையினராகவும், போராளிகளாகவும் இருக்கலாம். உக்ரைன் போர் களத்தில் தங்களது படைத் திறனை அதிகரிக்க சிரிய போராளிகளை அதிகளவில் சேர்த்துள்ளனர்.

அதேநேரம் ரஷ்யாவின் 1,50,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாட்டு கூலிப்படையினர் மற்றும் போராளிகளை எதற்காக ரஷ்யா நம்பியிருக்க வேண்டும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இருப்பினும் யாரெல்லாம் ரஷ்யாவுடன் இணைந்து களத்தில் உள்ளனர் என்ற புள்ளி விபரங்கள் எங்களிடம் இல்லை’ என்றார். சிரியாவில் இருந்து எதற்காக கூலிப்படையினர், போராளிகளை ரஷ்யா தேர்வு செய்துள்ளது என்றால், அந்நாட்டில் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைபெறும் உள்நாட்டு போரில் அந்நாட்டு அதிபர் பஷர் அல்-அசாத்தின் நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறிய நகரங்களை அந்நாட்டு போராளிகள் தாக்கி வருகின்றனர். அதனால் சிரியா போராளிகளையும், கூலிப்படையினரையும் உக்ரைனுக்குள் புடின் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், உக்ரைன் படைக்கு ஆதரவாக போரிட, வெளிநாட்டு கூலிப்படையினரும் அங்கு போரிட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், ‘சுமார் 20,000 வெளிநாட்டு தன்னார்வலர்கள் (கூலிப்படையினர்) கீவ் படைகளில் சேர்ந்துள்ளனர்’ என்றார்.

தொழில்முறை வீரர்கள் தான்...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ரஷ்யா தொலைக்காட்சியில் பேசிய அதிபர் புடின், ‘உக்ரைனில் நடக்கும் சண்டையில் ரஷ்ய ராணுவ வீரர்கள் எவரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. வேறு எவரும் களத்தில் இல்லை. ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த தொழில்முறை வீரர்களே போரை வழிநடத்தி வருகின்றனர். அவர்கள் நாட்டின் நோக்கத்தை நிறைவேற்றுவார்கள். ரஷ்ய மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை ராணுவத்தினர் உறுதிபடுத்துவார்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

Related Stories: